மிட்செல் ஸ்டார்க் அச்சுறுத்தலை சமாளிக்குமா இந்திய அணி? - ஆஸ்திரேலியாவுடன் சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஒருநாள் போட்டித் தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மோதுகின்றன.

ஒருநாள் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக சென்னை போட்டி அமைந்துள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் தலை சிறந்த அணிகள், ஆழமான பேட்டிங் வரிசையை கொண்ட அணிகள் என பல்வேறு சிறப்புகளை இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. எனினும் முதல் இரு ஆட்டங்களிலும் பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. முதல் இரு ஆட்டங்களிலும் 200 ரன்கள் கூட எட்டப்படவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் அதுவும் அடுத்தடுத்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களை கூட எட்டத்தவறியது அரிதான நிகழ்வே. வான்கடே போட்டியில் நெருக்கடி கொடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், விசாகப்பட்டினத்தில் இந்திய அணியை 26 ஓவர்களுக்குள் வெறும் 117 ரன்களுக்கு சுருட்டியதில் பிரதான பங்குவகித்தார்.

145 கி.மீ. வேகம் மற்றும் ஸ்விங்கையும் கலந்து சீராக வீசும் மிட்செல் ஸ்டார்க் ஆஃப்-மிடில் ஸ்டெம்ப் அல்லது மிடில்-லெக் ஸ்டெம்பை குறிவைத்து சரியான திசையில் தொடர்ச்சியாக வீசி அச்சுறுத்தல் கொடுத்தார். விசாகப்பட்டினத்தில் அவர், 8 ஓவர்களை வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் 5 விக்கெட்களை கொத்தாக அள்ளினார். பவர் பிளேவில் விக்கெட்களை வேட்டையாடுவதில்தான் ஸ்டார்க் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

காற்றில் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் அதனை தனது பந்து வீச்சுக்கு வலுவான ஆயுதமாகவும் ஸ்டார்க் மாற்றிக்கொள்வது கூடுதல் சிறப்பம்சம். விசாகப்பட்டினத்தில் மிட்செல் ஸ்டார்க்கிற்கு சீன் அபோட், நேதன் எலிஸும் உறுதுணையாக இருந்தனர். பந்து வீச்சில் இந்த கூட்டணி அதகளப்படுத்திய நிலையில் பேட்டிங்கில் 118 ரன்கள் இலக்கை வெறும் 11 ஓவர்களிலேயே எட்டி மிரளச் செய்தது டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி. இதன் மூலம் இந்திய அணி பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்ல வேண்டுமானால் இந்தியஅணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இரு முறையும் அவர், தனது விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க்கிடம் தாரை வார்த்தார். டி 20 போட்டியை போன்றே ஒருநாள் போட்டியையும் அவர், அணுகுவது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எனினும் அணி நிர்வாகம் மீண்டும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடும்.

சேப்பாக்கம் மைதானம் முதல் இரு போட்டிகள் நடைபெற்ற மைதானங்களை விட முற்றிலும் வேறுபட்டது. வழக்கமாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். மேலும்சேப்பாக்கம் எப்போதுமே அதிக ரன்கள் குவிக்கும் ஆடுகளமாக இருந்தது இல்லை. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கு விளையாடியது. ஆனால் அந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதான மாக சேப்பாக்கம் உள்ளதால் அந்த அணியின் வலிமைக்கு தகுந்தவாறே ஆடுகளம் தயார் செய்யப்பட்டிருக்கும் என்ற கருத்து உள்ளது. இந்த வகையில் தொடக்க ஓவர்களில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கும் நடுஓவர்களில் சுழற்பந்து வீச்சுக்கும் கைகொடுக்கும் என தெரிகிறது. இதனால் நடு ஓவர்களில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கக்கூடும்.இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

முதலில் பேட் செய்வது சாதகமா?: சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 23 ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 13 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இந்த மைதானத்தில் மோதின. இதில் மேற்கிந்தியத் தீவுகள் இலக்கை துரத்தி வெற்றி பெற்றிருந்தது.

சராசரி ரன் எவ்வளவு?: சேப்பாக்கம் மைதானத்தில் முதன் இன்னிங்ஸின் சராசரி ரன் குவிப்பு 230 ஆகும். 2-வது இன்னிங்ஸின் சராசரி ரன் குவிப்பு 210. 2007-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்பிரிக்கா லெவனுக்குஎதிராக ஆசிய லெவன்அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதேவேளையில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிராக 69 ரன்களில் கென்யா சுருண்டிருந்தது. இது குறைந்தபட்ச ஸ்கோராகும். 2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 288 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி இருந்தது. இதுவே இந்த மைதானத்தில் துரத்தப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

சேப்பாக்கத்தில் இரு அணிகளும்...

> சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந் துள்ளது. இரு ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

> சேப்பாக்கத்தில் முதன்முறையாக 1987-ல் நடைபெற்ற ஒருநாள் போட்டி யில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இதில் ஆஸ்திரேலியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கு எதிராக 2017-ல் இங்கு விளையாடி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டிருந்தது. இதுதவிர ஜிம்பாப்வே, மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸி லாந்து அணிகளையும் சேப்பாக்கத்தில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா.

என்ன சொல்கிறார் ராகுல் திராவிட்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது,“இந்திய அணியின் பேட்டிங் குறித்து நாங்கள் கவலை அடையவில்லை. மும்பை ஆடுகளம் சவாலாக இருந்தது. ஆனால் விசாகப்பட்டினம் ஆடுகளம் 117 ரன்கள் எடுக்கக்கூடியது அல்ல. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவிலான ஸ்கோர்களை குவித்துள்ளோம்.

எப்போதாவது இதுபோன்ற சரிவுகள் (விசாகப்பட்டினம் போட்டி) நிகழலாம். மிட்செல் ஸ்டார்க் அந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார். அவரை பாராட்ட வேண்டும். ஆட்டத்தின் முதல் ஸ்பெல்லை கடப்பதற்கும் அதிக விக்கெட்களை இழக்காமல் இருப்பதற்கும் நாங்கள் வழியை கண்டறிய வேண்டும்.

சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த இரு பந்துகளும் அற்புதமாக வீசப்பட்டவை. அவர், ஐபிஎல் தொடரில் அதிக அளவிலான ஆட்டங்களில் விளையாடியதால், சர்வதேச டி 20ல் சிறப்பாக செயல்படுகிறார். அதேபோன்று 50 ஓவர் போட்டியில் அதிகமாக விளையாடும் போது கற்றுக்கொள்வார். நாம், அவருக்கான நேரத்தை கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டுதான் வெவ்வேறு அணிச்சேர்க்கையை பயன்படுத்தி விளையாடுகிறோம். உலகக் கோப்பை போட்டியின் போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். 4 வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் அந்தத் தொடரில் நாங்கள் எதை கண்டும் ஆச்சர்யப்படக்கூடாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்