மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 189 ரன்கள் இலக்கை இந்திய அணி போராடி வென்றது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில், 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் 5, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 22, மார்னஷ் லபுஷேன் 15, ஜோஷ் இங்கிலிஸ் 26, கேமரூன் கிரீன் 12, கிளென் மேக்ஸ்வெல் 8, மார்கஸ் ஸ்டாயினிஸ் 5, சீன் அபோட் 0, ஆடம் ஸம்பா 0 ரன்களில் நடையை கட்டினர்.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 129 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷை ரவீந்திர ஜடேஜா வெளியேற்றியதும் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது. கடைசி 7 விக்கெட்களை அந்த அணி 59 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது. இந்திய அணி தரப்பில் மொகமது சிராஜ், மொகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
189 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. இஷான் கிஷன் 3 ரன்னில் ஸ்டாயினிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 4, சூர்யகுமார் யாதவ் 0, ஷுப்மன் கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாயினிஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
83 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. கே.எல்.ராகுல் 91 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 69 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாச இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வானார். 2-வது ஆட்டம் விசாகப்பட்டிணத்தில் நாளை (19-ம் தேதி) நடைபெறுகிறது.
முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago