முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸி இன்று மோதல்: 2020 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப காரணங்களுக்காக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்க உள்ளது. டி 20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழி நடத்தி இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தலைமையேற்பது இதுவே முதன்முறை. குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் என ஹர்திக் பாண்டியா மீது முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய ஆட்டம் அவரது கேப்டன் திறனை சோதிப்பதற்கான களமாக இருக்கக்கூடும்.

அதேவேளையில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதால் அதற்கு சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் தற்போதைய ஒருநாள் போட்டித் தொடரை இரு அணிகளும் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புகாட்டக்கூடும். இந்த ஆண்டில் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்றிருந்தது. இரு அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.

இந்த இரு தொடர்களிலும் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 113.40 சராசரியுடன் 567 ரன்களை வேட்டையாடி இருந்தார். இதில் 3 சதங்களும் அடங்கும். 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள இந்த ஆண்டில் அவரது பார்மும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா களமிறங்காததால் ஷுப்மன் கில் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவில் முடிவடைந்த 4-வதுடெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் நேர்த்தியாக விளையாடி சதம் விளாசியிருந்தார். இந்த பார்மை இன்றைய ஆட்டத்திலும் தொடரச் செய்வதில் ஷுப்மன் கில் கவனம் செலுத்தக்கூடும்.

ரன் இயந்திரமான விராட் கோலி பார்முக்கு திரும்பி இருப்பதும் அணிக்கு வலுசேர்த்துள்ளது. இந்த ஆண்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற 6 ஆட்டங்களில் விராட் கோலி 67.60 சராசரியுடன் 338 ரன்கள் சேர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களை விளாசி உள்ள விராட் கோலியிடம் இருந்து மேலும் சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவருக்கு லெக் ஸ்பின்னரான ஆடம் ஸம்பா நெருக்கடிதரக்கூடும். ஏனெனில் ஆடம் ஸம்பாவின் பந்து வீச்சில் விராட் கோலி 8 முறை ஆட்டமிழந்துள்ளார்.

உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு துறையில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியின் திறனை மீண்டும் சோதித்து பார்ப்பதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும். இதில் குல்தீப் யாதவ் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 11 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். வேகப்பந்து வீச்சில் மொகமது ஷமியுடன் மொகமது சிராஜ் களமிறங்கக்கூடும்.

பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா களம் இறங்கக்கூடும்.

பாட் கம்மின்ஸ் விளையாடாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்குகிறது. 5 முறை உலக சாம்பியனான அந்த அணி ஆல்ரவுண்டர்களால் நிரம்பி வழிகிறது. மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாயினிஸ், அஷ்டன் அகர் ஆகியோர் மட்டை வீச்சுடன் பந்து வீச்சிலும் பலம் சேர்க்கக்கூடியவர்கள். இந்த ஆல்ரவுண்டர் பட்டாளங்களுடன் ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், டிராவிஸ் ஹட், அலெக்ஸ் கேரி ஆகியோரும் இந்திய பந்து வீச்சுக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள தொடக்க வீரரான டேவிட் வார்னர், இழந்த பேட்டிங் திறனை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்குடன் சீன் அபோட் களமிறங்கக்கூடும். சுழலில் ஆடம் ஸம்பா ஜாலங்கள் நிகழ்த்தக்கூடும்.

இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, மொகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், உம்ரன் மாலிக், ஜெயதேவ் உனத்கட்.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அஷ்டன் அகர், ஆடம் ஸம்பா, நேதன் எலிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க்.

பதிலடி கொடுக்குமா?: மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதி இருந்தன. இந்த ஆட்டத்தில் 256 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்டிருந்தது. டேவிட் வார்னர் 128, ஆரோன் பின்ச் 110 ரன்கள் விளாசி இருந்தனர். 20 ரன்கள் உதிரிகளாக வழங்கப்பட்டிருந்தது. தற்போது பின்ச் ஓய்வு பெற்ற நிலையில் டேவிட் வார்னர் சிறந்த பார்மில் இல்லை. கடந்த முறை அடைந்த மோசமான தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

நேரம் - பிற்பகல் 1:30
நேரலை - ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்