“ஆஸி.யில் தனியறையில் அழுதே பொழுதைக் கழித்தேன்” - ஆர்சிபி பாட்காஸ்ட்டில் சிராஜ் பகிர்வு

By எல்லுச்சாமி கார்த்திக்

கடந்த 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தான் கடந்து வந்த சவாலான நாட்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாட்காஸ்ட் பதிவில் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ். ஐபிஎல் அரங்கில் பெங்களூரு அணிக்காக சிராஜ் விளையாடி வருகிறார். இதில் அவரது தந்தையின் மரணம், ஆஸ்திரேலியாவில் சந்தித்த இனவெறி ரீதியிலான கமெண்ட் குறித்தும் சிராஜ் பகிர்ந்துள்ளார்.

2020-ல் கரோனா கட்டுப்பாடு காரணமாக ஆஸ்திரேலிய நாட்டுக்கு இந்திய அணி முன்கூட்டியே செல்ல வேண்டி இருந்தது. அதனால் இந்திய அணி, நவம்பர் 13-ம் தேதி அங்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு தொடரில் பங்கேற்றது. இந்த பயணத்தில் முகமது சிராஜ் இடம்பெற்றிருந்தார். அவரது தந்தை முகமது கவுஸ், 2020 நவம்பர் 20-ம் தேதி காலமானார். தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்காமல் இந்திய அணியுடன் பயோ பபூளில் சிராஜ் இருந்தார்.

அந்தப் பயணத்தில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றி இருந்தார். 13 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில், அந்த கடின நாட்களின் அனுபவத்தை ஆர்சிபி அணியுடன் சிராஜ் பகிர்ந்துள்ளார். “கரோனா தொற்று காரணமாக வீரர்கள் யாரும் மற்ற வீரர்களின் அறைக்கு போக முடியாத சூழல் இருந்தது. வீடியோ அழைப்பு வழியே பேசிக் கொள்வோம். முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் சார் என்னை அடிக்கடி அழைத்து பேசுவார். நான் என்ன சாப்பிட்டேன் என விசாரிப்பார். எனது வருங்கால மனைவியும் அப்போது தொடர்ந்து பேசி இருந்தார். ஆனால், நான் போன் அழைப்புகளில் அழமாட்டேன். அறையில் தனியாக இருக்கும் போது அதிகம் அழுவேன். அப்பாவின் பிரிவு தாங்க முடியாத இழப்பாக இருந்தது.

அப்பா காலமான அடுத்த நாளே நான் பயிற்சிக்கு சென்றேன். அப்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ‘அப்பாவின் ஆசீர்வாதத்துடன் நிச்சயம் நீ ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவாய்’ என சொல்லி இருந்தார். அது காபா டெஸ்ட் போட்டியில் நடந்தது. ‘அப்பாவின் ஆசீர்வாதம்’ என அப்போது சொல்லி இருந்தார்.

ஆஸ்திரேலியாவில் இனவெறி ரீதியிலான தாக்குதலுக்கு ஆளானேன். என்னை கருங்குரங்கு என சொன்னார்கள். முதல் நாள் குடித்துவிட்டு சொல்கிறார்கள் என நினைத்தேன். அடுத்த நாளும் அது தொடர்ந்தது. கேப்டன் ரஹானேவிடம் சொன்னேன். அவர் நடுவரிடம் தெரிவித்தார். அப்போது இந்த சிக்கல் தீரும் வரை விளையாட வேண்டாம் என சொன்னார். ஆனால், நாங்கள் மறுத்தோம். அந்த செயலில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும்படி சொன்னோம். அதை கடந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினோம்.

காபா டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்திருந்த அணியுடன் விளையாடி வெற்றி பெற்றோம். அது மறக்க முடியாத அனுபவம்” என சிராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE