டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி: ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி தொடரை வென்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. உஸ்மான் கவாஜா 180, கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 128,விராட் கோலி 186, அக்சர் படேல் 79 ரன்கள் விளாசினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன், டாட் மர்பி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. மேத்யூ குனேமன் 0, டிராவிஸ் ஹெட் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. குனேமன் 6 ரன்களில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் அக்சர் படேல் பந்தில் போல்டானார் டிராவிஸ் ஹெட். 163 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை டிராவிஸ் ஹெட் சேர்த்திருந்தார். இதையடுத்து ஸ்மித் களமிறங்க மார்னஷ் லபுஷேன் தனது 15-வது அரை சதத்தை 150 பந்துகளில் கடந்தார்.

ஆஸ்திரேலிய அணி 78.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணிகளும் ஒப்புக்கொண்டன. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. லபுஷேன் 213 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நாக்பூர், டெல்லியில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்ததால் 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றி பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றது.

இறுதிப் போட்டிக்கு தகுதி..

அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளையின் போதே இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது. இதற்கு காரணம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே காரணம்.

நியூஸிலாந்து அணியின் வெற்றியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது. மாறாக புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 58.8 சராசரி வெற்றி புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜூன் மாதம் 7 முதல் 11-ம் தேதி வரை லண்டன் தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணியானது இந்தியாவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் அணியாக சாம்பியின்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

தொடர் நாயகன்கள்...

ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வானார். தொடர் நாயகனாக ரவிச் சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வானார்கள். இந்த தொடரில் அஸ்வின் 25 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 86 ரன்கள் சேர்த்தார். அதேவேளையில் ஜடேஜா 22 விக்கெட்களுடன் 135 ரன்கள் எடுத்தார்.

தொடர்ச்சியாக 4 முறை

பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக கைப்பற்றி உள்ளது. 2017-ம் ஆண்டு சொந்த மண்ணிலும், 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணிலும் தற்போது மீண்டும் சொந்த மண்ணிலும் இந்திய அணி பார்டர்-கவாஸ்ர் டிராபியை வென்றுள்ளது. 4 முறையும் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கிலேயே கைப்பற்றி உள்ளது.

2-வது முறையாக...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது.

சொந்த மண்ணில் ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்டர் டிராபி தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெல்லும் 16வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

அதிக ரன், அதிக விக்கெட்

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான தொடரில் 4 ஆட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 333 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தையும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 297 ரன்களுடன் 2வது இடத்தையும் பிடித்தனர். அதேவேளையில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் (25) முதலிடம் பிடித்தார். ரவீந்திர ஜடேஜா, நேதன் லயன் ஆகியோர் தலா 22 விக்கெட்களுடன் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.

பெற்ற புள்ளிகள் எத்தனை?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 இறுதிப் போட்டிக்கான வேட்டையில் ஆஸ்திரேலியா 19 போட்டிகளில் விளையாடி 11 வெற்றி, 3 தோல்வி, 4 டிரா என 66.67 சராசரி வெற்றி புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய அணி 18 டெஸ்ட் போட்டிகளில் 10 வெற்றி, 5 தோல்வி, 3 டிராவுடன் 58.8 சராசரி வெற்றி புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தது.

முதல் இரு இடங்களையும் பிடித்த இந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்ததுடன் புள்ளிகள் பட்டியலில் (48.48) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்