FIH புரோ லீக் ஹாக்கி | வெற்றி நடையை தொடரும் இந்தியா: ஜெர்மனியை மீண்டும் வீழ்த்தியது

By செய்திப்பிரிவு

ரூர்கேலா: கடந்த நான்கு நாட்களில் ஜெர்மனி அணியுடன் இரண்டு முறை பலப்பரீட்சை செய்து அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த கார்த்தி 24 மற்றும் 46-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார்.

2022-23 FIH புரோ லீக் ஹாக்கி சீசனின் சில போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய அணி ஜெர்மனி (2 முறை) மற்றும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதுவும் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி அணியை இரண்டாவது முறையாக இந்தியா வீழ்த்தி உள்ளது. ஆட்டத்தின் 21, 22, 24, 26, 46 மற்றும் 51-வது நிமிடங்களில் இந்திய அணி கோல் பதிவு செய்தது. இதில் அபிஷேக் மற்றும் கார்த்தி தலா இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு புரோ லீக் ஹாக்கி சீசனில் 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 வெற்றிகளுடன் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இந்தியா. வரும் 15-ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாட உள்ளது. அதன்பிறகு வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுடன் இந்தியா இந்த சீசனுக்கான போட்டிகளில் விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE