IND vs AUS 4-வது டெஸ்ட் | 3 வருடங்களுக்குப் பிறகு சதம் விளாசி விராட் கோலி தகர்த்த சாதனைகள்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. விராட் கோலி 186 ரன்களையும், அக்சர் படேல் 79 ரன்களையும் விளாசினர்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத் தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 128, ரோஹித் சர்மா 35, சேதேஷ்வர் புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 59, ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ஜடேஜா 28 ரன்களில் டாட் மர்பி பந்தில் மிட் ஆன் திசையில் நின்ற கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் அதிரடியாக விளையாடினார். கேமரூன் கிரீன் வீசிய 134-வது ஓவரில் ஸ்ரீகர் பரத், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாச 21 ரன்கள் கிடைத்தது.

மட்டையை சுழற்றிய ஸ்ரீகர் பரத் 88 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் ஷார்ட் லெக் திசையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார். விராட் கோலியுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு ஸ்ரீகர் பரத் 84 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய அக்சர் படேலும் அதிரடியாக விளையாடினார். குனேமன் ஓவர்களில் 3 சிக்ஸர்களும், டாட் மர்பி பந்தில் ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார் அக்சர் படேல். மறுபுறம் நிதானமாக பேட் செய்த விராட் கோலி 241 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 28-வது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி162-வது ஓவரில் 480 ரன்களைகடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. 6-வது விக்கெட்டுக்கு 215 பந்துகளில் 162 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை மிட்செல் ஸ்டார்க் பிரித்தார். அக்சர் படேல் 113 பந்துகளில், 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல்ஸ்டார்க் பந்தில் போல்டானார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை அக்சர் படேல் டிரைவ் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு ஸ்டெம்பை பதம்பார்த்தது.

இதன் பின்னர் இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்கள் விரைவாக சரிந்தன. ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்னில் நேதன் லயன் பந்தை சிக்ஸருக்கு தூக்க முயன்ற போதுகுனேமனிடம் கேட்ச் ஆனது. உமேஷ் யாதவ் (0) ரன் அவுட்ஆனார். இரட்டை சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி கடைசி விக்கெட்டாக டாட் மர்பி பந்தில் மார்னஷ் லபுஷேனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 365 பந்துகளை சந்தித்த விராட் கோலி, 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் விளாசினார்.

முடிவில் இந்திய அணி 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மொகமது ஷமி ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார். ஸ்ரேயஸ் ஐயர் முதுகுவலி காரணமாக களமிறங்கவில்லை. இந்திய அணி தனது கடைசி 4 விக்கெட்களை 16 ரன்களுக்கு தாரை வார்த்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நேதன் லயன், டாட் மர்பி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது.மேத்யூ குனேமன் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் டிராவிஸ் ஹெட் 3 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.

27 ஓவர்களும் கோலியும்..: 4-வது நாள் ஆட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடிக்க 27 ஓவர்கள் எடுத்துக்கொண்டார். தனது 5-வது பவுண்டரியை 89-வது பந்தில் அடித்த விராட் கோலி, 6-வது பவுண்டரியை 251-வது பந்தில் அடித்தார். இதற்காக அவர், சந்தித்த பந்துகள் 162 ஆகும். இது சுமார் 27 ஓவர்கள். இந்த ஓவர்களில் விராட் கோலி ஒன்று, இரண்டு ரன்களாக ஓடி, ஓடி சேர்த்தார். 60 ரன்கள் முதல் சதத்தை எட்டும் வரை விராட் கோலி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

விராட் கோலி 3 வருடங்களுக்குப் பிறகு சதம்: அகமதாபாத் டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் விராட் கோலி 3 வருடங்களுக்குப் பிறகு அடித்துள்ள சதம் இதுவாகும். கடைசியாக அவர், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16-வது சதம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் அகமதாபாத் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்தார். அந்த அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள 16-வது சதம் இதுவாகும். இந்த வகை சாதனையில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்கள் விளாசி உள்ளார்.

விராட் கோலி 41 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகப்பெரிய இடைவெளி.

முதலிடத்தில் லயன்…: இந்திய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வெளிநாட்டு பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் நேதன் லயன். அவர், 55 விக்கெட்களை இதுவரை வீழ்த்தி உள்ளார். இந்த வகையில் இதற்கு முன்னர் இங்கிலாந்தின் டெரெக் அண்டர்வுட் 54 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்