மேத்யூஸ் சதம்: வெற்றி பெறுமா இலங்கை? - நியூஸிலாந்து வெற்றிக்கு 257 ரன்கள் தேவை!

By ஆர்.முத்துக்குமார்

கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இலங்கை அணி தன் 2வது இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆட்டமிழக்க நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்கு 285 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நாள் முடிவில் டெவன் கான்வே (5 ரன்கள்) விக்கெட்டை ரஜிதாவிடம் இழந்து 28 ரன்களை எடுத்துள்ளது நியூஸிலாந்து அணி.

டாம் லேதம் 11 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து வெற்றி பெற இன்னும் 257 ரன்கள் தேவை. மாறாக இலங்கை வெல்ல இன்னும் 9 விக்கெட்டுகள் தேவை. 90 ஓவர்கள் மீதமுள்ளன. முடிவு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயும். இலங்கை வெற்றி பெற்று விட்டால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்தியா செல்வது கடினமாகி விடும்.

நேற்று 20 நாட் அவுட்டாக இருந்த ஆஞ்சேலோ மேத்யூஸ் இன்று தனது 35வது வயதில், தன் 101வது டெஸ்ட் போட்டியில் 14வது சதத்தை எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு 115 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 302 ரன்களுக்கு தன் 2வது இன்னிங்ஸில் சுருண்டது.

5ம் நாள் ஆட்டம் சுவாரஸ்யத்தின் உச்சத்திற்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நியூஸிலாந்து வென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் 3வது அதிகபட்ச இலக்கை விரட்டி சாதனையை நிகழ்த்தும்.

இலங்கை இன்று 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் என ஆட்டத்தை தொடங்கியது. அதாவது நியூஸிலாந்தின் முன்னிலையான 18 ரன்களைக் கழித்து விட்டால் 65 ரன்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துகள் பவுன்ஸ் ஆகி ஸ்விங் ஆனாலும் மேத்யூஸ் 2 செஷன்கள் தாக்குப்பிடித்தார். ஐந்தரை மணி நேரம் ஆடிய மேத்யூஸ் 11 பவுண்டரிகளுடன் 235 பந்துகளில் சதம் கண்டார்.

மேத்யூஸுக்கு உறுதுணையாக சந்திமால் ஆடி 42 ரன்களை சேர்க்க இருவரும் 105 ரன்கள் கூட்டணி அமைத்தனர். தனஞ்ஜெய டிசில்வா 47 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து அணியில் பொதுவாக இந்த மாதிரியான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் நீல் வாக்னர் பந்து வீச முடியவில்லை. அவர் காயம் காரணமாக பந்து வீசவில்லை. பிட்சில் பவுன்ஸும், வேகமும் இருந்ததால் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், ஹென்றி 3 விக்கெட்டுகளையும், சவுதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நாளை 5ம் நாள் வெற்றி பெறவே ஆடுவோம் என்று நியூஸிலாந்து அணியின் டிக்னர் தெரிவித்தார். இலங்கை அணிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நியூஸிலாந்து போன்ற அணியெல்லாம் எப்பொது எப்படி ஆடும் என்று யாரும் கணிக்க முடியாது. திடீரென 450 ரன்கள் இலக்கை வெறி கொண்டு விரட்டும். சில வேளைகளில் 100 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் சுருண்டு தோற்கும். எனவே நியூஸிலாந்து அணியை இது போன்ற சூழ்நிலைகளில் கணிப்பது கடினம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE