ஆஸி.க்கு பதிலடியாக ஷுப்மன் கில் சதம் விளாசல் - எதை நோக்கி செல்கிறது அகமதாபாத் டெஸ்ட்?

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான ஷுப்மன் கில் சதம் விளாசிய நிலையில் விராட் கோலி அரை சதம் கடந்தார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 17, ஷுப்மன் கில் 18 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினர்.

முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா, குனேமன் வீசிய பந்தில் எக்ஸ்டிரா கவர் திசையில் நின்ற மார்னஷ் லபுஷேனிடம் பிடிகொடுத்து எளிதாக ஆட்டம் இழந்தார். 58 பந்துகளை சந்தித்த ரோஹித் சர்மா, ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் களமிறங்கிய சேதேஷ்வர் புஜாரா, ஷுப்மன் கில்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

சீராக ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச அரங்கில் இது அவரது 2-வது சதமாக அமைந்தது. அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த புஜாரா 121 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் டாட் மர்பி பந்தில் தற்காப்பு ஆட்டம் விளையாட முயன்றபோது எல்பிடபிள்யூ ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கில்லுடன் இணைந்து புஜாரா 113 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 248 பந்துகளை சந்தித்திருந்தது.

இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் அளித்த ஷுப்மன் கில் 235 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 58 ரன்கள் சேர்த்தார் ஷுப்மன் கில்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார். பொறுமையாக விளையாடிய விராட் கோலி 107 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 29-வது அரை சதத்தை கடந்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 99 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி 128 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 54 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 191 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இந்திய அணி.

14 மாதங்களுக்கு பிறகு அரை சதம்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் அரை சதம் அடித்தார். 14 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் அவர், அரை சதம் எட்டியுள்ளார். கடைசியாக விராட் கோலி 2022-ம் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார்.

2 மாதத்தில் 5 சதங்கள்...: 2 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில் (ஜனவரி 15, 2023 முதல்), ஷுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி 20 கிரிக்கெட் என மூன்று வடிவங்களிலும் 5 சதங்களை அடித்துள்ளார்.

4,000 ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர்: இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி. அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான நேற்று 42 ரன்களை எட்டிய போது இந்த மைல் கல் சாதனையை நிகழ்த்தினார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் (7,216), ராகுல் திராவிட் (5,598), சுனில் கவாஸ்ர் (5,067), சேவக் (4,656) ஆகியோரும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

50-வது டெஸ்ட் போட்டி: சொந்த மண்ணில் 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 13-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி. தற்போதைய வீரர்களில் அஸ்வின் 55-வது போட்டியிலும், புஜாரா 51-வது போட்டியிலும் விளையாடி வருகின்றனர்.

எதை நோக்கி செல்கிறது 4-வது டெஸ்ட்?: அகமதாபாத் டெஸ்டில் நேற்று மட்டும் இந்திய அணி 90 ஓவர்களை சந்தித்து 256 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் சேர்த்த 480 ரன்களை எட்டுவதற்கு இந்தியாவுக்கு மேற்கொண்டு 191 ரன்கள் தேவை. இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகித்தாலும் அகமதாபாத்தில் வெற்றி கண்டு தொடரை 3-1 என நிறைவு செய்தால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஒருவேளை அகமதாபாத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்து, மறுபுறம் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இலங்கை அணி மோதும் சூழ்நிலை உருவாகும்.

மாறாக அகமதாபாத் டெஸ்ட் போட்டியை இந்தியா டிராவில் முடித்து, மறுபுறம் இலங்கை அணியானது நியூஸிலாந்து தொடரை 2-0 என கைப்பற்ற தவறினால் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் கைகூடும். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 3 நாட்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் 4-வது நாளான இன்றும் இந்திய அணி முழுமையாக பேட் செய்வதில் கவனம் செலுத்தக்கூடும். 150 ரன்கள் முன்னிலை பெறும் பட்சத்தில் கடைசி நாளில் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஏதேனும் மாயங்கள் நிகழ்த்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிடக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE