அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல்இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா, கேமரூன்கிரீன் ஆகியோரது அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்து செய்து 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 4-வது போட்டி தொடங்கியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சீராக ரன்களைக் குவித்தனர்.
அபாரமாக ஆடிய கேமரூன் கிரீன் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 114 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அலெக்ஸ் கேரியை வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பினார் அஸ்வின். மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களில் வீழ்ந்தார்.
மறுமுனையில் இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த கவாஜாவை 180 ரன்களில் வீழ்த்தினார் அக்சர்.
கடைசி நேரத்தில் நேதன்லயன் 34, மர்பி 41 ரன்கள் சேர்க்க 480 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6, ஷமி 2, ஜடேஜா, அக்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் இந்தியஅணி முதல் இன்னிங்ஸை தொடங்கி 10 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 444 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 17 ரன்களுடனும், ஷுப்மன் கில் 18 ரன்களுடனும் 3-ம் நாள் ஆட்டத்தை இன்று தொடரவுள்ளனர்.
கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு இரங்கல்: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆஸ்திரேலிய அணி வீரர் பேட் கம்மின்ஸின் தாய் நேற்று காலமானார். இதையடுத்து நேற்றைய ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து இரங்கலை வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் முதல் சதம்: டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இந்தத் தொடரில் விளாசினார் கேமரூன் கிரீன். இந்தியாவில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களில் லெஸ் ஃபாவெல், பால் ஷியாகன், டீன் ஜோன்ஸ், மைக்கேல் கிளார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளில் தங்களது முதல் சதத்தை இந்தியாவில் விளாசியுள்ளனர்.
தரவரிசையில் முதலிடம்: ஐசிசி நேற்று வெளியிட்டுள்ள டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் சமபுள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் ஆகியோர் தலா 113 விக்கெட்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். அதற்கு அடுத்தபடியாக இந்திய வீரர்கள் கும்ப்ளே (111 விக்கெட்கள்), ஹர்பஜன்சிங் (95 விக்கெட்கள்) உள்ளனர். மேலும் 32-வது முறையாக ஓர் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வேட்டையாடி உள்ளார் அஸ்வின்.
3-வது இடத்தில் உஸ்மான் கவாஜா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச ஸ்கோரை விளாசிய ஆஸி. வீரர்கள் பட்டியலில் உஸ்மான் கவாஜா (180 ரன்கள்) 3-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸும் (210 ரன்கள்), 2-வது இடத்தில் மேத்யூ ஹேடனும் (203 ரன்கள்) உள்ளனர்.
300 கேட்சுகள்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 300 கேட்சுகள் பிடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட்கோலி பெற்றார். அஸ்வின் வீசிய பந்தை ஆஸி. வீரர் நேதன் லயன் அடிக்க அது கோலியின் கைகளில் தஞ்சமானது. இது விராட் கோலியின் 300-வது கேட்ச்சாக அமைந்தது. அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் ராகுல் திராவிட் (334 கேட்சுகள்), 3-வது இடத்தில் முகமது அசாருதீன் (261 கேட்சுகள்) உள்ளனர்.
அலெக்ஸ் கேரியின் மோசமான சாதனை: இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியை 5-வது முறையாக வீழ்த்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். 6 இன்னிங்ஸ்களில் அஸ்வினின் 40 பந்துகளை சந்தித்துள்ள அலெக்ஸ் கேரி 25 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 5 முறை ஆட்டமிழந்தும் உள்ளார்.
அதிகபட்ச பார்ட்னர்ஷிப்: இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்தவர்களில் 2-வது இடத்தை உஸ்மான் கவாஜா-கேமரூன் கிரீன் ஜோடி பிடித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இருவரும் கூட்டாக 208 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியாவின் கே. ஹியூஸ்-ஆலன் பார்டர் ஜோடி 222 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
55 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago