‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வேட்டை’: 4-வது டெஸ்டில் இந்தியா – ஆஸி. இன்று மோதல்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் அகமதாபாத் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், இந்தூரில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றியை வசப்படுத்தின. இந்நிலையில் கடைசி மற்றும் 4-வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடரில் 2-1 என முன்னிலை வகித்தாலும், வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் அகமதாபாத் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

அகமதாபாத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை 3-1 வென்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை கைப்பற்றும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் தகுதி பெற்றுவிடும். மாறாக தோல்வியை சந்தித்தால் இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட 3 ஆடுகளங்களும் முற்றிலும் சுழலுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் எந்த ஆட்டமும் 3 நாட்களை தாண்டவில்லை. முதல் நாளிலேயே ஆடுகளத்தில் பந்துகள் அதிக அளவில் திரும்பியதுடன் சீரற்ற பவுன்ஸ்கள் இருந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அகமதாபாத் ஆடுகளத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அநேகமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கும் கைகொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் விதமாக விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத்துக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறக்கப்படக்கூடும். மேலும் அக்சர் படேலும் தனது இடத்தை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்தத் தொடரில் அக்சர் படேல் பேட்டிங்கில் 185 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் பந்து வீச்சில்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேவேளையில் கே.எஸ்.பரத், விக்கெட் கீப்பிங் பணியை திறம்பட செய்து வந்தாலும் மட்டை வீச்சில் அவரிடம் இருந்து போதுமான பங்களிப்பு வெளிப்படவில்லை. அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சில் மொகமது சிராஜூக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மொகமது ஷமி களமிறக்கப்படக்கூடும். அவருடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் இடம் பெறுவார். இந்தூர் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தாக்குதல் ஆட்டம் தொடுப்பதில் கவனம் செலுத்தி விக்கெட்களை பறிகொடுத்தனர்.

புஜாரா 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தது ஆறுதல் அளித்தது. பார்முக்கு திரும்பி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்தலாம். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் இந்தூர் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது.

இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. அகமதாபாத்திலும் அந்த அணி வெற்றியை வசப்படுத்தினால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 15 தொடர்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணியின் வெற்றி வேட்டைக்கு முற்றுப் புள்ளி வைக்கும். அகமதாபாத்திலும் ஆஸ்திரேலிய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காண திட்டமிடக் கூடும்.

நேரம்: காலை 9.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதீத நம்பிக்கையா?: இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதீத நம்பிக்கையின் காரணமாக தோல்வி அடைந்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்திருந்தார். அவரது கருத்துக்கு ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “முதல் இரு டெஸ்ட்டுகளில் வெற்றி பெற்ற நிலையில் நாங்கள் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாக வெளியே உள்ளவர்கள் எண்ணி விடுகிறார்கள். இது அபத்தமானது. ஏனெனில் நாங்கள் 4 டெஸ்ட்டுகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறோம். நாங்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளதாக மற்றவர்கள் எண்ணினால் எங்களுக்கு அதுகுறித்துக் கவலை இல்லை. ஏனெனில் ரவி சாஸ்திரியும் எங்களுடன் ஓய்வறையில் இருந்துள்ளார். விளையாடும்போது நாங்கள் என்ன மனநிலையில் இருப்போம் என்பது அவருக்குத் தெரியும்” என்றார்.

கோலியின் ரன் வறட்சி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியின் டெஸ்ட் சராசரி கடந்த மூன்றரை ஆண்டுகளில் 25 என்ற அளவில்தான் உள்ளது. தொடக்க பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலின் பார்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் தனது இடத்தை இந்தூர் டெஸ்ட் போட்டியில் இழந்தார். தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி இதுவரை 111 ரன்களே சேர்த்துள்ளார். கடைசியாக அவர், விளையாடிய 15 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் விராட் கோலி, சதம் அடித்து 1,200 நாட்கள் ஆகிறது.

மிகப்பெரிய மைதானம்..: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தை 1,04,859 பேர் நேரில் கண்டு ரசித்தார்கள்.

நேரில் காணும் பிரதமர்கள்…: அகமதாபாத்தில் இன்று தொடங்கும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் கண்டுகளிக்க உள்ளார். இதையொட்டி மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்