கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட் சர்ச் நகரில் நாளை அதிகாலை 3.30 மணி அளவில் தொடங்குகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்தத் தொடர் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (9-ம் தேதி) அதிகாலை 3.30 மணி அளவில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 17-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமேசான் பிரைம் நேரலை செய்கிறது.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என முழுமையாக கைப்பற்றினால் வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இலங்கை அணியின் வாய்ப்பு என்பது அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் முடிவை பொறுத்தே அமையும்.
இந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க தவறினால் மட்டுமே இலங்கை அணிக்கான வாய்ப்புக்கு வழி பிறக்கும். இது ஒருபுறம் இருந்தாலும் நியூஸிலாந்து மண்ணில் வெற்றி பெறுவது என்பது இலங்கை அணிக்கு சுலபமானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது. இதுவரை இலங்கை அணி, நியூஸிலாந்து மண்ணில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இரு போட்டிகளில் மட்டுமே வெற்றிகண்டுள்ளது. எனினும் இம்முறை திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிக்கு கூடுதல் ஊக்கம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் சில்வர்வுட்டின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி மேம்பட்ட திறனை சீராக வெளிப்படுத்தி வருகிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்ற இலங்கை அணி அதன் பின்னர் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சொந்த மண்ணில் டிரா செய்தது.
கடந்த வாரம் இந்திய அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இலங்கை அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து சில்வர்வுட் கூறும்போது, “டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது என்பது நம்ப முடியாததாக இருக்கும்.
ஆனால், அதேவேளையில் எங்களுக்கு முன்னால் சிறந்த அணியான நியூஸிலாந்து உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், அந்த அணியை நாங்கள் மதிக்க வேண்டும். வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான உரிமையைப் பெற முயற்சிக்க வேண்டும்" என்றார்.
நியூஸிலாந்து அணி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது. அதேவேளையில் இலங்கை அணியில் 23 வயதான பேட்ஸ்மேன் நிஷான் மதுஷ்கா, 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்னாயகே ஆகிய இரு புதுமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நிஷான் மதுஷ்கா சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3 ஆட்டங்களில் இரட்டை சதம் மற்றும் இரு சதங்கள் அடித்திருந்தார். இதனால் அவர், தேசிய டெஸ்ட் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணியானது சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என டிரா செய்த நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் பாலோ-ஆன் பெற்றிருந்த நிலையில் வலுவாக மீண்டு வந்து இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது நியூஸிலாந்து அணி.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாலோ-ஆன் பெற்று வெற்றி கண்ட 4-வது அணி என்ற பெருமையையும் நியூஸிலாந்து பெற்றிருந்தது. மேலும் தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்த முடியாமல் நிலவிய வறட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தது டிம் சவுதி குழுவினர். இந்த வெற்றியை இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்வதில் நியூஸிலாந்து அணி முனைப்பு காட்டக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago