IND vs AUS | இந்தூர் ஆடுகளம் மோசம்: ஐசிசி ரேட்டிங்

By செய்திப்பிரிவு

துபாய்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய இந்தூர் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் மோசம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் மானிட்டரிங் பிராசஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கடந்த 1-ம் தேதி இந்தூரில் தொடங்கியது. இருந்தும், 2 நாட்கள் மற்றும் ஒரே செஷனில் இந்தப் போட்டியில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இரு அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இந்த ஆடுகளம் சொர்க்கபுரியாக திகழ்ந்தது. முதல் நாளில் 14 விக்கெட், இரண்டாம் நாளில் 16 விக்கெட் மற்றும் மூன்றாம் நாளில் 1 விக்கெட் என மொத்தமாக 31 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. இதில் 26 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தனர்.

இந்தூர் மைதானம் குறித்த அறிக்கையை ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட், இரு அணியின் கேப்டன்கள் உடன் கலந்து பேசிய பிறகு தனது சமர்ப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது மூன்று டிமெரிட் புள்ளிகள் இந்தூர் மைதானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அடுத்த 14 நாட்களுக்குள் பிசிசிஐ முறையிடலாம் என தெரிகிறது. ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு மைதானம் ஐந்து அல்லது அதற்கும் மேலான டிமெரிட் புள்ளிகளை பெற்றால் அங்கு அடுத்த 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டி நடத்த முடியாத வகையல் ஐசிசி தகுதி நீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்பட்டது. பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு பேலன்ஸ் கொடுக்கும் வகையில் ஆடுகளம் இல்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. போட்டியில் வீசப்பட்ட ஐந்தாவது பந்தே ஆடுகளத்தின் மேற்பரப்பை தகர்த்தது. ஆட்டம் முழுவதும் அது போல அவ்வப்போது நடந்தது. சீம் அறவே இல்லை. பந்து கணிக்க முடியாத அளவுக்கு எழும்பி வந்தது” என கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE