இந்தூரில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியும் 3ம் நாள் காலை முதல் ஒருமணி நேரத்திலேயே முடிந்தது. வித்தியாசம் என்னவெனில் இந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை நொறுக்கியதோடு தொடரில் 2-1 என்று வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று விட்டது. இந்த டெஸ்ட் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது.
பாட் கமின்ஸ் இந்த டெஸ்ட்டில் இல்லாமல் போனதும் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்தியதும் ஆஸ்திரேலிய அணிக்கு மறைமுக ஆசீர்வாதமாகி விட்டது. ஸ்மித் பெட்டர் கேப்டன், ஸ்மித்தின் களவியூகம் பந்து வீச்சு மாற்றம், இந்திய பேட்டர்களின் உத்தி குறித்த ஸ்மித்தின் அறிவு ஆகியவை இந்த முறை பிட்சினாலும் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகி விட்டது.
டாஸ் வென்று ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது 4வது இன்னிங்ஸ் குறித்த பயமா, அல்லது முதல் நாள் பிட்ச் நமக்கே ‘குழி’ தோண்டப்பட்ட பிட்ச் என்பது பற்றிய அறியாமையா என்பதைக் கண்டுப்பிடிக்க துப்பறியும் குழுவினாலும் முடியாது. முதல் நாளில் இரு அணிகளும் 265 ரன்களை எடுப்பதற்குள் 14 விக்கெட்டுகள் பறிபோயின. 2-ம் நாளான நேற்று 16 விக்கெட்டுகள் 204 ரன்களுக்குக் காலியாகின. நேதன் லயன் தன் வாழ்நாளின் சிறந்த டெஸ்ட் பவுலிங் அனாலிசிஸ் ஆக 8/63 என்று அசத்தியதில் பிட்சின் பங்கும் இந்திய பேட்டர்களின் ஸ்பின் பிட்சில் ஆடுவதற்கான காய்நகர்த்தல்கள், உத்திகள், பொறுமை என்று எதுவும் இல்லாமையும் காரணமாக அமைந்தன.
» வணிகவரித்துறையில் நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி வரை ரூ.1.17 லட்சம் கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி
» பஞ்சாப் சட்டம் ஒழுங்கு விவகாரம் | துணை ராணுவப்படையை அனுப்புகிறது மத்திய அரசு
முதல் நாள் பிட்ச் ஆகச்சிறந்த மோசமான, படுமோசமான பிட்ச். டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப 50 ஆண்டுகளாக போடப்படாத படுமோசமான பிட்ச் என்றே கூறலாம். கடந்த முறை இங்கிலாந்து இங்கு வந்திருந்த போது அகமதாபாத் பகலிரவு டெஸ்ட் ஒன்றரை நாளில் முடிந்த போது போட்ட பிட்சை விட படுமோசம். அதாவது இந்திய பிட்ச் போடுதலின் லாஜிக் என்னவெனில் மோசமான முதல் டெஸ்ட் பிட்சை விட மிக மோசமான 2வது டெஸ்ட் பிட்ச், இதை விட மிக மிக மோசமான 3வது டெஸ்ட் பிட்ச். அதாவது முந்தைய பிட்சை குறை கூறிகின்றாயா? இப்ப என்ன செய்வ? இதுக்கு என்ன சொல்ற? என்பது போன்ற அடுத்தடுத்து மோசமான பிட்ச்களைப் போடுவது, இதற்கு அந்தப் பிட்சே பரவாயில்லையப்பா என்று ரசிகப்பெருமக்களை எண்ண வைக்கச் செய்வது.
இது போன்ற இயற்கைக்கு மாறான திருத்தப்படும் பிட்ச்கள் இந்திய அணிக்கே எதிராகப் போகும் என்று பலரும் எச்சரித்தும் இந்திய கேப்டன், அணி நிர்வாகம் உட்பட யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் என்ன ஆனது? ஆஸ்திரேலியா இந்தியாவில் ஆடிய கடந்த 17 டெஸ்ட்களில் 2வது வெற்றியைப் பெற்றது.
இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள்:
ஆஸ்திரேலியா இந்தூர் வெற்றி மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்தியா இறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் அகமதாபாத் டெஸ்ட்டில் வென்றே ஆக வேண்டும்.
நியூஸிலாந்து சென்றிருக்கும் இலங்கை அணி நியூஸிலாந்தை 2-0 என்று வெற்றி பெற்றால் கூட இந்தியா அகமதாபாத் டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் தகுதி பெற்று விடும். இல்லையெனில் 2-0 என்று நியூஸிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை இறுதிப் போட்டியைத்தான் பார்க்க வேண்டும்.
மாறாக இலங்கை அணி நியூஸிலாந்தில் 2-0 என்று வெற்றி பெறவில்லை எனில் இந்தியா அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றாலும் வெல்லா விட்டாலும் தகுதி பெற்று விடும்.
இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் தேதிதான் தொடங்குகின்றன.
அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்காக ரோஹித் சர்மா கிரீன் டாப் பிட்ச் கேட்டிருக்கிறாராம். இது ‘வதந்தியா’, உண்மையான செய்தியா என்று தெரியவில்லை. ஆனால் இந்தத் தோல்விக்குப்பிறகு நிச்சயம் கிரீன் டாப் ஆசையையெல்லாம் குழிதோண்டிப் புதைத்திருப்பார் ரோஹித் சர்மா. பிறகு இந்தியாவில் க்ரீன் டாப் பிட்ச் என்பதெல்லாம் முழுக்கவும் பொய்யான ஒன்றே. ஏனெனில் வெறுமனே பிட்சின் மேற்புறம் பாசிமேவியது போல், பச்சை பெயிண்ட் அடித்தது போல் இருந்தால் அது க்ரீன் டாப் பிட்ச் அல்ல, பிட்சின் அடிப்பகுதி, கீழ்ப்பகுதி எவ்வளவுக்கெவ்வளவு உறுதியாக, கெட்டியாக, திண்மையாக இருக்கின்றதோ அதைப்பொறுத்துதான் கிரீன் டாப் பிட்சிற்கான பலாபலன்களும் கிடைக்கும். அடியில் ஒன்றும் உறுதி இல்லாமல், திண்மை இல்லாமல் மேலே மட்டும் புற்கள் இருக்கும் பிட்சைப் போட்டால் ஈரப்பதம் இருக்கும் வரைக்கும் கொஞ்சம் ஸ்விங், டென்னிஸ் பால் பவுன்ஸ் இருக்கும் ஆனால் போகப்போக வெயில் அடிக்க அடிக்க, அது பஞ்சு மெத்தைப் பிட்ச் ஆகத்தான் இருக்கும். உமேஷ் யாதவ்வையே அவுட் செய்ய முடியது. ஆகவே கிரீன் டாப் பிட்ச் என்பது இந்திய மண்ணைப் பொறுத்தவரை தவறான ஒரு பெயர் சூட்டுதலே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago