ஆஸ்திரேலியாவுடன் 3-வது டெஸ்டில் இன்று மோதல் - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

இந்தூர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் 3-வது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்தூர் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. மோசமான பார்ம் காரணமாக கே.எல்.ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தாலும் அவருக்கு மீண்டும் ஒரு முறை அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கக்கூடும்.

சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தத் தொடரில் இதுவரை ஒரு சதம் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ரோஹித் சர்மாவின் நேர்த்தியான ஆட்டத்தால் வந்தது. சேதேஷ்வர் புஜரா, விராட் கோலி ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். டாப்-ஆர்டர் பேட்டிங் சரிவை சந்தித்த சூழ்நிலைகளில் இந்த மூவர் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலம் சேர்த்துள்ளது. இதனால் இவர்களிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.

ஆஸ்திரேலிய அணியில் சொந்த காரணங்களுக்காக பாட் கம்மின்ஸ் தாயகம் சென்றுள்ளார். அதேவேளையில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் காயம்காரணமாக விலகி உள்ளார். இவர்களுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் களமிறங்கக்கூடும். கேமரூன் கிரீனின் வருகை அணிக்கு பலம் சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும்.

பேட்டிங்கில் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க வீராக டிராவிஸ் ஹெட் களமிறங்குவார் எனத் தெரிகிறது. டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் கவாஜா, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுத்து 81 ரன்கள் சேர்த்திருந்தார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் ஆகியோர்இந்தத் தொடரில் சராசரியாக 30 ரன்களுக்கு கீழ்தான் எடுத்துள்ளனர். இவர்களிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்பட்டால் மட்டுமே இந்திய அணிக்கு எதிராக போராட முடியும்.

ஹோல்கரில் எப்படி...: ஹோல்கர் மைதானத்தில் இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இங்கு 2016-ல் நியூஸிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2019-ல் வங்கதேச அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

மாத்தி யோசிக்கிறாங்க…: டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக அளவிலான ஸ்வீப்ஷாட்களை விளையாடி விக்கெட்களை பறிகொடுத்தனர். இந்த யுக்தி விமர்சிக்கப்பட்டது. இதனால் இந்தூர் போட்டிக்கான பயிற்சியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் தற்காப்பு ஆட்டம் மற்றும் கிரீஸுக்கு வெளியே வந்து பந்தை தூக்கி அடிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி உள்ளனர்.

மைதானம் எப்படி?: இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் கருப்பு மண் கொண்டு தயார் செய்யப்பட்ட ஆடுகளம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த வகையிலான ஆடுகளத்தில் பொதுவாக பந்துகள் அதிகம் திரும்பாது மற்றும் பவுன்ஸும் இருக்காது. முதல் இரு நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதன் பின்னர் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும்.

என்ன செய்ய வேண்டும்?: ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பேட் செய்வது அவசியம். இது எச்சரிக்கை மற்றும் ஆக்ரோஷத்தின் கலவையாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான தாக்குதல் ஆட்டம் எதிர்விளைவை ஏற்படுத்திவிடும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அஸ்வின் ஆதிக்கம்…: இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 டெஸ்டில் விளையாடி 18 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். 2016-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 13 விக்கெட்கள் வீழ்த்தினார். 2019-ல் வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்