டென்னிஸ் தரவரிசை பட்டியல் - 378 வாரங்களாக முதலிடம் பிடித்து நோவக் ஜோகோவிச் சாதனை

By செய்திப்பிரிவு

பாரிஸ்: சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார்.

22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள 35 வயதான ஜோகோவிச், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 378 வாரங்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளார். இந்த வகையில் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் அதிகபட்சமாக ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்துள்ளார் ஜோகோவிச்.

கடந்த 2011-ம் ஆண்டு முதன் முறையாக விம்பிள்டனில் பட்டம் வென்ற போது ஜோகோவிச், தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தார். அதன் பின்னர் அவர், 2014-ம் ஆண்டு ஜூலை 7 முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி வரை தொடர்ச்சியாக 122 வாரங்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் வகித்திருந்தார்.

ஆடவர் பிரிவில் அதிக வாரங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை (310 வாரங்கள்) கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முறியடித்திருந்தார் ஜோகோவிச். தற்போது ஆடவர், மகளிர் என இருபாலருக்கான தரவரிசை பட்டியலை கணக்கிடும் போது ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE