டி20 கிரிக்கெட்டில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஐல் ஆஃப் மேன் அணி

By செய்திப்பிரிவு

கார்டஜினா: ஆடவருக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது ஐல் ஆஃப் மேன் அணி.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையே உள்ள குட்டி தீவு ஐல் ஆஃப் மேன். இந்நிலையில் ஐல் ஆஃப் மேன் கிரிக்கெட் அணி ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து 6 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4 ஆட்டங்களை வென்று ஸ்பெயின் அணி ஏற்கெனவே தொடரை தன்வசப்படுத்தி இருந்தது. 2-வது ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் கார்டஜினா நகரில் இரு அணிகளும் மோதின.முதலில் பேட் செய்த ஐல் ஆஃப் மேன் அணி 8.4 ஓவர்களில் 10 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோசப் பர்ரோஸ் 4 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் பர்ரோஸ், லூக் வார்டு, ஜேக்கப் பட்லர் ஆகியோர் தலா 2 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் டக் அவுட் ஆனார்கள். ஸ்பெயின் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்களான அதிஃப் மெஹ்மூத், முகமது கம்ரான் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதில் முகமது கம்ரானின் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். அவர்,வீசிய 3-வது ஓவரில் லூக் வார்டு(2), ஹார்ட்மேன் (0), எட்வர்ட் பியர்ட் (0) ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதன் மூலம் ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது ஐல் ஆஃப் மேன் அணி. இந்த வகையில் கடந்த ஆண்டு பிக்பாஷ் டி 20 தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் 5.5 ஓவர்களில் 15 ரன்களுக்கு சுருண்டிருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2019-ம் ஆண்டு செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் துருக்கி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. அதை தற்போது மிஞ்சியுள்ளது ஐல் ஆஃப் மேன். 11 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்பெயின் அணி 2 பந்துகளை மட்டுமே சந்தித்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அவாய்ஸ் அகமது முதல் இரு பந்துகளிலும் சிக்ஸர் விளாச ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியால் டி 20 தொடரை 5-0 என வென்றது ஸ்பெயின் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE