அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பந்த் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார்: கங்குலி கருத்து

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ரிஷப் பந்த் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில் விபத்துக்கு பிறகு தான், பந்த் உடன் இரண்டு முறை பேசியதாக கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவரது இடத்தை நிரப்புவது சவாலான காரியம் எனவும் தெரிவித்துள்ளார்.

“நான் பந்த் உடன் பேசினேன். அவர் தற்போது கடினமான சூழலை கடந்து வருகிறார். எப்படியும் ஓரிரு ஆண்டுகளில் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார். எதிர்வரும் ஐபிஎல் சீசனில் அவருக்கான மாற்று வீரரை நாங்கள் தெரிவு செய்ய வேண்டி உள்ளது” என கங்குலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE