வெலிங்டன் டெஸ்ட்: 108 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

By ஆர்.முத்துக்குமார்

வெலிங்டன்: வெலிங்டனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி தன் ஃபாலோ ஆன் 2வது இன்னிங்சில் 483 ரன்களைக் குவிக்க, இங்கிலாந்து தன் வெற்றி இலக்கான 258 ரன்களை விரட்டும் முனைப்பில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.

4-ம் நாள் ஆட்ட முடிவில் பென் டக்கெட் 23 ரன்களுடனும் இரவுக்காவலனாக இறக்கப்பட்ட ஆலி ராபின்சன் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். முன்னதாக ஜாக் கிராலி தன் வழக்கமான அதிரடி பாணியில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் விளாசி, சவுதியின் ஆஃப் கட்டர் பந்து ஒன்று கால்காப்புக்கும் பேட்டுக்கும் இடையே புகுந்து ஸ்டம்பைத் தாக்க வெளியேறினார்.

நாளை 5ம் நாள் மீதமுள்ள 210 ரன்களை இங்கிலாந்து எடுத்து வெற்றி பெற்றால் தொடர்ந்து 5-வது வெற்றியை அயலக மண்ணில் பெறும். இது இங்கிலாந்தின் டெஸ்ட் வரலாற்றில் சாதனை வெற்றியாகும். இதற்கு முன்பாக 1913-14ல் இதே போல தொடர் டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்து அணி பிறகு இப்போதுதான் 5 தொடர் டெஸ்ட் வெற்றிகளை அயலக மண்ணில் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. எனவே நாளை வரலாறு படைக்க இங்கிலாந்து தயார் என்றே கூறலாம்.

இங்கிலாந்தை தடுக்க நியூஸிலாந்துக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு, டெஸ்ட் தொடரையும் சமன் செய்ய ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த 258 ரன்களை இங்கிலாந்து நிச்சயம் 50 ஓவர்களில் முடிக்கப் பார்க்கும். இந்த அதிரடி ஆட்டத்தினால் விக்கெட்டுகளை இழந்தால் நியூஸிலாந்துக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என்றே தெரிகிறது.

இன்று காலை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 26 ரன்கள் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்கள் என்ற நிலையில் நியூஸிலாந்து தொடங்கியது. முதலில் ஹென்றி நிகோல்ஸ் 29 ரன்களில் வெளியேறினார் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் டேரில் மிட்செல் ஆக்ரோஷமாக ஆடி 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 பந்துகளில் 54 ரன்கள் விளாச வில்லியம்சன், மிட்செல் சேர்ந்து 75 ரன்களை 17 ஓவர்களில் விளாசினர். குறிப்பாக டேரில் மிட்செல்தான் சாத்தினார். மிட்செல் 54 ரன்களில் வெளியேற, இறங்கினார் டாம் பிளெண்டல்.

இவரும் கேன் வில்லியம்சனும் இணைந்து இங்கிலாந்து பந்து வீச்சை எந்தவித சிரமமுமின்றி ஆடி 158 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பிளெண்டல், 166 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து லீச் பந்தில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் அதியற்புதமான ஒரு சதத்தை எடுத்து தன் சத வறட்சியைப் போக்கினார்.

282 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்து கேன் வில்லியம்சன் ஹாரி ப்ரூக் பந்தில் லெக் திசையில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். துரதிர்ஷ்டவசமான அவுட் அது. கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததையடுத்து இங்கிலாந்து மீதமுள்ள 4 விக்கெட்டுகளை 28 ரன்களில் காலி செய்ய நியூஸிலாந்து 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 61.3 ஓவர்கள் வீசி 157 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்க்க, ஆலி ராபின்சன், பிராட், ரூட், புரூக் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இங்கிலாந்து வெற்றிக்குத் தேவை 210 ரன்கள். நாளை 5ம் நாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE