கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்த 2-வது வீரரான மெஸ்ஸி: ரொனால்டோவுடன் இணைந்தார்

By செய்திப்பிரிவு

பாரீஸ்: கால்பந்தாட்ட உலகின் மாயமான் என மெஸ்ஸியை சொல்லலாம். நேற்று பிஎஸ்ஜி கிளப் அணிக்காக, Olympique de Marseille அணிக்கு எதிரான ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் அவர் கோல் பதிவு செய்தார். அது கிளப் அணிகளுக்காக அவர் பதிவு செய்த 700-வது கோல் ஆகும். இது அவரது விளையாட்டு உலக சாதனைகளில் புதிய சாதனையாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் கால்பந்தாட்ட உலகில் 700 கோல்களை கிளப் அணிகளுக்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ பதிவு செய்திருந்தார். இப்போது அந்த வரிசையில் இரண்டாவது வீரராக மெஸ்ஸி இணைந்துள்ளார். இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு கோல்களை எம்பாப்பே பதிவு செய்திருந்தார். இதன் மூலம் பிஎஸ்ஜி அணிக்காக 200 கோல்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை எம்பாப்பே படைத்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது. இந்த சூழலில் உலகக் கோப்பை வென்ற இரண்டு மாத காலத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். பார்சிலோனா கிளப் அணிக்காக 672 கோல்கள் மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக 28 கோல்களையும் அவர் பதிவு செய்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 98 கோல்களை சர்வதேச களத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

கிளப் அணிகளுக்காக சுமார் 840 போட்டிகளில் மெஸ்ஸி விளையாடி உள்ளார். அதன் மூலம் 700 கோல்கள், 299 அசிஸ்ட்களை அவர் செய்துள்ளார். அதுவே ரொனால்டோ, 955 கிளப் போட்டிகளில் விளையாடி 709 கோல்கள் மற்றும் 203 அசிஸ்ட்களை செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE