இந்திய டென்னிஸ் அடையாளத்துக்கு ஓய்வு!

By வா.சங்கர்

இந்திய டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த சானியா மிர்சா, டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

1985-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஹைதராபாத்தில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்கு சிறுவயது முதலே டென்னிஸ் மீது அலாதிப்பிரியம். சிறுமியாக இருக்கும்போதே டென்னிஸ் பயிற்சியைத் தொடங்கிவிட்டார். 18 வயதில் அதாவது 2003-ல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். பல போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியாவின் அசைக்க முடியாத டென்னிஸ் நட்சத்திரம் என்ற அடையாளத்தை ஈட்டினார். 2003-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இந்திய டென்னிஸின் அடையாளமாக, நம்பிக்கையாக வலம் வந்தார்.

இந்திய டென்னிஸ் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் ராமநாதன் கிருஷ்ணன், லியாண்டர் பயஸ், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ், சோம்தேவ் தேவ்வர்மன், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா என ஆடவர் வரிசை மட்டுமே நீள்கிறது. மகளிர் பிரிவில் ருஷ்மி சக்கரவர்த்தி போன்ற சிலரே இருந்தனர். ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் உலக அளவில் சாதித்தனர். ஆனால் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலை இருந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்த தேவதையாக மாறினார் சானியா மிர்சா. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சானியாவுக்கு டென்னிஸ் விளையாட அவரது சமூகமே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி உலக அரங்கில் டென்னிஸ் தேவதையாக ஜொலித்தார். தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் ஆர்வம் காட்டிய சானியா, அதன் பின்னர் தனது களத்தை இரட்டையர் பிரிவுக்கு மாற்றினார்.

சானியா, கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்தார். துபாய் டூட்டி ஃப்ரீ ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் துபாய் ஓபனில் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீயுடன் பங்கேற்ற சானியா, முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

போட்டிக்கு முன்னதாக சானியா மிர்சா பேசியதாவது: பெண் குழந்தைகளாக பல்வேறு அழுத்தத்தை சமூகம் மூலம் நீங்கள் எதிர்கொள்வீர்கள். என் விஷயத்தில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக நின்றனர். இளம் பெண்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் நினைப்பதை செய்யக்கூடாது என்று யாரும் உங்களை தடுக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்று மற்றவர்கள் உங்களுக்காக முடிவெடுக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

துபாய் டென்னிஸ் அரங்கத்தில் தனது கடைசி விளையாட்டை விளையாடிய சானியா மிர்சா கண்ணீருடன் ஓய்வு பெற்றார். அவரது கடைசி ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். கணவர் ஷோயப் மாலிக், மகன் இஹானுடன் துபாயில் வசித்து வருகிறார்.

டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வழிகாட்டியாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இனி ஆர்சிபி வீராங்கனைகளின் சிறந்த வழிகாட்டியாக சானியா திகழ்வார் என எதிர்பார்க்கலாம்.

> 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றாலும் பதக்கம் வெல்லாத குறை இவருக்கு உள்ளது.

> 2009-ல் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையரில் பட்டம், 2012-ல் பிரெஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபனில் பட்டம், 2015-ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு, 2015 அமெரிக்க ஓபன், 2016 ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியிருக்கிறார்.

> 2002-ல் ஆசிய விளையாட்டில் கலப்பு இரட்டையரில் வெண்கலம், 2006 ஒற்றையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் தங்கம், மகளிர் அணி பிரிவில் வெள்ளி, 2010 ஒற்றையர் போட்டியில் வெண்கலம், கலப்பு இரட்டையரில் வெள்ளி, 2014 மகளிர் இரட்டையரில் வெண்கலம், கலப்பு இரட்டையரில் தங்கம், காமன்வெல்த் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என அவரது பதக்கப் பட்டியல் நீள்கிறது.

> 2004-ல் அர்ஜுனா விருதும், 2006-ல் பத்மஸ்ரீ விருதும், 2015-ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2016-ல் பத்ம பூஷண் விருதையும் மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

> கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் 6 சாம்பியன் பட்டங்களை வென்று இந்திய டென்னிஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதினார். இதையடுத்து கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மாறினார்.

முன்னாள் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை பில்லி ஜீன் கிங்: அபாரமான டென்னிஸ் வாழ்க்கையை சானியா வாழ்ந்துள்ளார். டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சானியாவுக்கு வாழ்த்துக்கள். டென்னிஸுக்குப் பிறகான வாழ்க்கையை சிறப்பாக அவர் வாழ வாழ்த்துக்கள்.

வீராங்கனை விக்டோரியா அசரென்கா: சானியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். ஏராளமான பெண்களுக்கு முன்னுதாரணமாகவும், உத்வேகமாகவும் இருக்கும் சானியாவுக்கு நன்றி.

இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா: சிறப்பான டென்னிஸ் வாழ்க்கையை அளித்த சானியாவுக்கு வாழ்த்துக்கள். இந்திய விளையாட்டு உலகுக்கு நீங்கள் அளித்த சேவையை மறக்க முடியாது. லட்சக்கணக்கான பெண் குழந்தைகளின் உத்வேகமாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்து அவர்கள் விளையாட்டுத்துறைக்கு வருகின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ்: டென்னிஸ் விளையாட்டுக்காக நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொண்டீர்கள். உங்கள் விளையாட்டைப் பார்ப்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்: ஒட்டுமொத்த டென்னிஸ் தலைமுறையினரும் உங்களால் உத்வேகம் பெற்றுள்ளனர். வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்தும் சிறந்ததாகவே கிடைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தியாவைப் பெருமைப்படச் செய்துள்ளீர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE