IPL 2023 | இறுதிகட்ட போட்டிகளை பென் ஸ்டோக்ஸ் மிஸ் செய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனின் இறுதிகட்ட போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ், மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நோக்கில் முன்கூட்டியே இங்கிலாந்து செல்வார் என தெரிகிறது.

எதிர்வரும் ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் விளையாடுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். அதற்கு உதாரணம் 2019 ஒருநாள் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை சொல்லலாம்.

இந்த சூழலில் வரும் சீசனில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அதில் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என தெரிகிறது. அவர் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மே 28-ம் தேதி அன்று இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் முகாமில் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அது முடிந்ததும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிகமுக்கிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.

“அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் நிச்சயம் விளையாடுவேன். இந்த போட்டியில் சக வீரர்கள் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் கையில் கொடுக்க உள்ளேன். ஏனெனில், ஆஷஸ் தொடரில் அந்த ஐந்து போட்டிகளும் முக்கியம். அந்த தொடர் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியை விடவும் பெரியது” என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களை சில காரணங்களுக்காக ஸ்டோக்ஸ் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE