“பாபர் அசாம் ஒரு பிராண்ட் கிரிக்கெட்டர் அல்ல. அவரால் ஆங்கிலம் பேச முடியாது” - ஷோயப் அக்தர்

By செய்திப்பிரிவு

ராவல்பிண்டி: “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு பிராண்ட் கிரிக்கெட்டர் அல்ல. ஏனெனில், அவரால் ஆங்கிலம் பேச முடியாது” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவது ஒரு கலை என்றால், ஊடகத்துடன் கலந்து பேசுவது ஒரு கலை என அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் உள்ளூர் சேனல் உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் பாபர் அசாமின் ஆங்கில மொழித்திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவரே சொல்லியுள்ளார்.

“அணியில் யாருக்குமே எப்படி ஆங்கிலத்தில் பேசுவது எனத் தெரியவில்லை. ஆங்கிலம் கற்பதும், பேசுவதும் அவ்வளவு கடினமா என்ன? கிரிக்கெட் ஒரு வேலை என்றால், மீடியாவை கையாள்வதும் ஒரு பணிதான். உங்களால் அந்த மொழியில் பேச முடியவில்லை எனில், உங்களை நீங்கள் ஊடகத்தில் வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. நான், ஷஹித் அஃப்ரிடி மற்றும் வாசிம் அக்ரம் மட்டும் ஏன் அனைத்து விளம்பரங்களை பெற்று வருகிறோம். அதற்கு எங்கள் மொழித்திறனே காரணம்.

பாபர் அசாம், பாகிஸ்தானின் மிகப் பெரிய பிராண்டாக இருக்க வேண்டும் என்பதை நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். ஆனால், அவர் ஏன் பாகிஸ்தானில் மிகப் பெரிய பிராண்டாக மாறவில்லை? அவரால் ஆங்கிலம் பேச முடியாததால்தான்” என அக்தர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE