இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகள் என்ன? - பட்டியலிடுகிறார் மைக்கேல் கிளார்க்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகளை அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தொடர்ந்து டெல்லியில் நேற்று முன்தினம் முடிவடைந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கையாண்ட பேட்டிங் யுத்திகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளன. பந்துகள் தாழ்வாக வரும் ஆடுகளங்களில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீட் ஷாட்களை விளையாடி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை தாரை வார்த்தனர். இரு போட்டியிலும் எந்த ஒரு கட்டத்திலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களிடம் இருந்து போராட்ட குணம் வெளிப்படாதது விவாதப் பொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தை திட்டமிட்டே தவிர்த்தது. அதற்கு பதிலாக பெங்களூருக்கு அருகே சுழற்பந்து வீச்சுக்கு எதிரான ஆடுகளங்களை அமைத்து பேட்டிங் பயிற்சிகளை வித்தியாசமான முறைகளில் மேற்கொண்டது. ஆனால் இது எதுவுமே முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு உதவவில்லை.

அடுத்தடுத்த இரு தோல்விகளால் பார்டர்-கவாஸ்கர் டிராபியை மீண்டும் கைப்பற்றும் ஆஸ்திரேலிய அணியின் கனவு தகர்ந்துள்ளது. மேலும் எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கலை சந்திக்கக்கூடும் என்ற நெருக்கடியான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகளை அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர், கூறியதாவது:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்பாட்டை பார்ப்பதில் எனக்கு எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிபயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுபெரிய தவறு. இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்குப் பழகுவதற்கு குறைந்தபட்சம் ஒரு பயிற்சி ஆட்டமாவது இருந்திருக்க வேண்டும். முதல் டெஸ்ட் போட்டிக்கான அணித்தேர்விலும் மிகப்பெரிய தவறு இருந்தது.

இன்னிங்ஸை தொடங்கும் போது ஸ்வீப் ஷாட்கள் சரியானவை கிடையாது. உங்கள் இன்னிங்ஸின் தொடக்கத்தில் சுழலுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் செய்வதற்கு ஒருபோதும் சரியான சூழ்நிலையாக இருக்காது.

எத்தனை உதவி பயிற்சியாளர்கள் உங்களை சுற்றி இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை, நீங்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறீர்கள். நிச்சயமாக ஒரு பேட்ஸ்மேனாக உயர்ந்த மட்டத்தில் விளையாடுவதால் வெகுமதிக்கு எதிரான ரிஸ்க்கை கணக்கிட வேண்டும். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நேராக விளையாட வேண்டும். சுழற்பந்து வீச்சை நேராக அடித்து விரட்ட வேண்டும். இந்த இரு கோட்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். சுழற்பந்து வீச்சில் ஒவ்வொரு பந்தையும் நான் நேராகவே அடித்து விளையாடுவேன்.

சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என இந்திய அணியிடம் இருந்து ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ததை ஆஸ்திரேலிய அணி பார்க்காதது போன்றே உள்ளது. இந்திய வீரர்களுக்கு சூழ்நிலைகள் நன்றாக தெரியும், அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பார்க்கிறோம். அதை ஏன் உதாரணமாக எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவதில்லை?.

இந்திய அணி வீரர்கள் நன்றாக விளையாடும்போது, நாம் ஏன் வித்தியாசமாக முயற்சிசெய்ய வேண்டும்?. டெல்லி டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை இருந்தது. நாம் 60 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையே இழந்திருந்தோம். ஆனால் மேற்கொண்டு 52 ரன்களை சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களை இழந்தோம்.

பாட் கம்மின்ஸின் பீல்டிங் யுத்திகளும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதில் என்ன நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எல்லைக் கோட்டுக்கு அருகே 4 பீல்டர்களை கம்மின்ஸ் நிறுத்தி இருந்தார். டெஸ்ட்போட்டியில் இரண்டரை நாட்கள் மீதம் இருந்தது. இந்திய அணியை 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தோல்வி அடைய நேரிடும் என்ற நிலைதான் இருந்தது. 20 ஓவர்களில் தோல்வியை சந்திப்பதும் அல்லது இரு நாட்களில் போட்டியை இழப்பதும் பொருத்தமற்றது.

இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்