புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 72 ரன்களும் சேர்த்தனர்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக தொடக்கம் கொடுத்தது. டேவிட் வார்னர் 44 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஷமிபந்தில் ஸ்ரீகர் பரத்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் 18 ரன்னில் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஸ்டீவ் ஸ்மித் (0), அஸ்வின் பந்தில் பரத்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இந்த இரு விக்கெட்களையும் அஸ்வின் ஒரே ஓவரில் சாய்த்தார்.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாடி ரன்கள் சேர்த்த உஸ்மான் கவாஜா 71 பந்துகளில் தனது 20-வது அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் நிதானமாக பேட் செய்த டிராவிஸ் ஹெட் 30 பந்தில், 12 ரன்கள் எடுத்தநிலையில் மொகமது ஷமியின் பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா 125 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடிய போது கே.எல்.ராகுல் பாய்ந்து சென்று ஒற்றை கையால் அற்புதமாக கேட்ச் செய்தார்.
» விளையாட்டுத் துளிகள் | தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரானார் குல்கர்னி
» சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் - அரை இறுதியில் நுழைந்தார் சுமித் நாகல்
தொடர்ந்து அலெக்ஸ் கேரியை (0) ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். 168 ரன்களுக்கு 6 விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி இழந்துதவித்தது. அப்போது பீட்டர் ஹேண்ட்ஸ்கம்புடன் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் இன்னிங்ஸை கட்டமைக்க உதவினார். ஹேண்ட்ஸ்கம்ப் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியபடி சீராக ரன்களையும் சேர்த்தார். 7-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் கம்மின்ஸ் எல்பிடபிள்யூ ஆனார். கம்மின்ஸ் 59 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இதே ஓவரில் டாட் மர்பியும் (0) ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நேதன் லயன் 10, மேத்யூ குனேமன் 6 ரன்களில் ஷமி பந்தில் நடையை கட்ட ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவர்களில் 263ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது 5-வது அரை சதத்தை அடித்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 142 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்களையும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 13, கே.எல்.ராகுல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.
அஸ்வின் 100: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20-வது டெஸ்ட்டில் விளையாடி வரும் அஸ்வின் அந்த அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 100 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே 111 விக்கெட்களுடன் முதலிடம் வகிக்கிறார். உலக அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்களுக்கும் மேல் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின் 15-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் இயன் போத்தம் 148 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 250: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் 2,500 ரன்களையும் பந்து வீச்சில் 250 விக்கெட்களையும் விரைவாக கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த மைல் கல் சாதனையை டெல்லி டெஸ்ட் போட்டியின் போது உஸ்மான் கவாஜா விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றிய போது நிகழ்த்தினார். 62 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார் ஜடேஜா. இந்த வகை சாதனையை இயன் போத்தம் 55 போட்டிகளில் நிகழ்த்தியிருந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago