முகமது ஷமி 
விளையாட்டு

IND vs AUS | இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமா? - ஷமி மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இந்திய வீரர் முகமது ஷமி. இந்த சூழலில் இந்திய ஆடுகளங்கள் ஸ்லோதான். ஆனால், வேகப்பந்து வீச்சுக்கும் கைகொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை அவர் காலையில் கைப்பற்றினார். அதேபோல அந்த அணியை ஆல் அவுட் செய்யும் வகையில் டெயிலெண்டர்களான லயன் மற்றும் குனேமன் விக்கெட்டை காலி செய்தார். அதே நேரத்தில் இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

“இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகம்தான். இந்த விக்கெட்டில் ஒன்றும் இல்லை என்றால் நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை நிச்சயம் இங்கு பெற முடியும். இந்திய ஆடுகளங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை.

இங்கு நல்ல வேகத்தில், சரியான இடங்களில் பந்து வீசினால் போதும். இந்தப் போட்டியை பொறுத்தவரையில் நாங்கள் சிறிய அளவில் முன்னிலை பெற்றால் கூட நன்றாக இருக்கும்” என ஷமி தெரிவித்துள்ளார்.

டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முதல் செஷனின் முதல் சில நிமிடங்கள் ஷமி மற்றும் சிராஜ் இணையர் பந்துவீசி ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களை இம்சித்தனர். முன்னதாக, இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஆஸ்திரேலியா தரப்பில் இந்திய ஆடுகளங்கள் குறித்து பல்வேறு வகையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT