தொழில்நுட்ப சிக்கலால் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: மன்னிப்புக் கேட்ட ஐசிசி

By செய்திப்பிரிவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஆஸ்திரேலிய அணிதான் முதல் இடத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் இது தொழில்நுட்ப ரீதியான சிக்கல் காரணமாக ஏற்பட்டது என ஐசிசி அதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்தது என சொல்லப்பட்டது. தொடர்ந்து சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 மூன்று வடிவ கிரிக்கெட்டில் முதலிடத்தில் இந்தியா இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில்தான் டெஸ்ட் தரவரிசையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லி, அதனை பின் வாங்கிக் கொண்டது ஐசிசி.

ஐசிசி வலைதளத்தில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி சில மணி நேரம் முதலிடத்தில் இருந்ததற்கு காரணம், தொழில்நுட்ப சிக்கல் என்றும், முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் இருப்பதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது 115 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நாளை டெல்லியில் துவங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. நான்கு போட்டிகள் கொன்ற இந்த தொடரை இந்தியா வெல்வதன் மூலம் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE