ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தபோது களேபரம்: கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கப் போய், அது களேபரத்தில் முடிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்படுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

23 வயதான பிரித்வி ஷா கடந்த 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளவயது வீரர்களில் இவரும் ஒருவர். இதுவரை 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அணியில் அவருக்கான வாய்ப்பு எட்டாக்கனியாக உள்ளது. இந்த நிலையில்தான் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் இது தொடங்கியுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பிரித்வி ஷாவை பார்த்ததும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் செல்ஃபி வேண்டும் என சொல்லியுள்ளனர். அவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால், அவர்கள் விடாமல் தொடர்ந்து செல்ஃபி எடுக்க விடுதியின் மேலாளர் மூலம் அவர்களை வெளியேற்றி உள்ளார்.

பின்னர் விடுதியில் இருந்து பிரித்வி ஷா வரும் வரை வெளியில் காத்திருந்து அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். காரை பின்தொடர்ந்து வந்ததாகவும், கார் கண்ணாடியை உடைத்ததாகவும், 50 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டதாகவும் பிரித்வி ஷா தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அவருக்கு எதிராகவும் இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சப்னா எனும் பெண்ணை பிரித்வி ஷா தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE