இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான் துளசிதாஸ் பலராம் காலமானார்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் துளசிதாஸ் பலராம் காலமானார். அவருக்கு வயது 87. அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என போற்றப்படும் 1951-62 காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய வீரர். இந்திய கால்பந்து விளையாட்டின் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் என்றும் போற்றப்படுகிறார். முன்கள வீரர். 1956 மற்றும் 1960 ஒலிம்பிக்கில் விளையாடியவர். 1962 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் விளையாடியவர்.

கடந்த 1936, அக்டோபர் 4-ம் தேதி செகந்திராபாத் பகுதியில் வாசித்த தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தஞ்சாவூரில் இருந்து அவரது குடும்பம் அங்கு புலம் பெயர்ந்துள்ளது. தனது மூத்த சகோதரர்களை பார்த்து கால்பந்து விளையாட தொடங்கி உள்ளார். அங்கிருந்து தொடங்கிய அவரது கனவுப் பயணம் இந்திய அணிக்காக விளையாடுவது வரை நகர்ந்தது. 1962-ல் அர்ஜுனா விருதை வென்றார். 1963-ல் உடல்நலன் சார்ந்த சிக்கலால் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டில் கோல் பதிவு செய்தவர்.

இந்தியக் கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் இவர், 1960 ஒலிம்பிக்கில் ஹங்கேரிக்கு எதிராக பதிவு செய்த ஒரு கோல், இவர் பதிவு செய்த கோல்களில் சிறந்த கோல் என அறியப்படுகிறது.

உடல்நல கோளாறு காரணமாக கடந்த டிசம்பரில் மருத்துவமனையில் பலராம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தனது 87 வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE