இங்கிலாந்து சரவெடி பேட்டிங்; பென் டக்கெட் சாதனை அரைசதம் - நியூஸி. திணறல்

By ஆர்.முத்துக்குமார்

நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இன்று முதல் பகலிரவு டெஸ்ட்டில் களம் கண்டது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டிம் சவுதி முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். காரணம் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்பதால். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படும் மனநிலையில் இல்லை.

பிரெண்டன் மெக்கல்லம் பாணி ‘பாஸ்பால்’ அதிரடி முறையில் ஆடி 58.2 ஓவர்களில் ஓவருக்கு 5.57 என்ற ரன் விகிதத்தில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து விட்டது. மீண்டும் தொடக்க வீரர் பென் டக்கெட் 84 ரன்கள், ஹாரி ப்ரூக் 89 ரன்கள் வெளுத்து வாங்கினர்.

தொடர்ந்து தன் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி ஆண்டர்சனின் ஸ்விங் பவுலிங்கில் விக்கெட்டுகளை இழந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள். ஆலி ராபின்சன் 1 விக்கெட். ஆட்டமிழந்த வீரர்கள் டாம் லேதம் (1), கேன் வில்லியம்சன் (6), ஹென்றி நிக்கோல்ஸ் (6). முதல் நாள் ஆட்ட முடிவில் கிரீசில் நிற்பவர்கள் டெவன் கான்வே 17, நைட் வாட்ச்மேன் நீல் வாக்னர் 4.

டாஸ் வென்று இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்ததும், இங்கிலாந்து பாஸ்பால் பாணியில் பேட் செய்ய தொடங்கியது. தொடக்கத்திலேயே ஜாக் கிராலி டவுன் த விக்கெட் வந்து ஆடினார். ஆனால், அது எட்ஜ் ஆகி மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகச் சென்றது. கடினமான அந்த வாய்ப்பை அங்கு பிரேஸ்வெல் கோட்டை விட்டார். இருந்தாலும் அதிக நேரம் கிராலி நீடிக்கவில்லை. சவுதியின் அபாரமான அவுட் ஸ்விங்கரை பளார் என்று கவர் டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆகி இதே பிரேஸ்வெல் கேட்ச் எடுக்க கிராலி 4 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகுதான் படையல் ஆரம்பித்தது. பென் டக்கெட் 14 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி அதிரடி தொடக்கம் கொடுத்தார். மறு முனையில் ஆலி போப் ஸ்டைலிஷாக ஆடினார். 36 பந்துகளில் அரைசதம் கண்டு இங்கிலாந்தின் தொடக்க வீரராக அதிவேக டெஸ்ட் அரைசத சாதனையை நிகழ்த்தினார். நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை தன் கைகளின் அசாத்திய வேகமான சுழற்றல் மூலம் பின்னி எடுத்து விட்டார் பென் டக்கெட். 14 பவுண்டரிகளை விளாசினார்.

ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் ஸ்கோர் 105 என்று வந்தது. உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் எடுக்கும் வாய்ப்பு வந்தது பென் டக்கெட்டுக்கு. 14 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய டக்கெட், டிக்னர் பந்தை கவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் என்ற டெஸ்ட் போட்டிகளின் அடிப்படைகளை தகர்த்தது இங்கிலாந்து.

ஜோ ரூட் என்னடாவென்றால் வந்தவுடனேயே ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களை நீல் வாக்னருக்கு எதிராக ஆட ஆரம்பித்தார். ஆனால், 22 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் இதே நீல் வாக்னர் பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆடப்போய் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளின் ஆகச்சிறந்த பேட்டரான ஜோ ரூட், பாஸ்பால் ஆக்ரோஷத்தின் மூலம் தன் பேட்டிங்கின் பலத்தை இழந்து வருவதாகவே தெரிகிறது. பென் ஸ்டோக்ஸ் இறங்கினார். 3 ஆக்ரோஷ பவுண்டரிகளுடன் 19 ரன்களில் குக்கெலீன் பந்தில் வெளியேறினார். ஆலி போப் 65 பந்துகளில் 42 ரன்கள் விளாசி சவுதியிடம் வீழ்ந்தார். இதனையடுத்து 38வது ஓவரில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் என சரிவு கண்டது.

ஆனால் இதன் பிறகு பாகிஸ்தானில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 559 ரன்களை 93 ரன்கள் சராசரியுடன் எடுத்த ஹாரி புரூக்கை நியூஸிலாந்து பவுலர்களால் நிறுத்த முடியவில்லை. 43 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்ட புரூக், 15 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 81 பந்துகளில் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவருக்கு உறுதுணையாக விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 17 ஓவர்களில் 98 ரன்களை விளாசினர்.

ஆலி ராபின்சன் கடைசியில் 11 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களை எடுக்க இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. காரணம், பவுலிங்குக்குச் சாதகமாக இரவு சூழ்நிலையைப் பயன்படுத்த ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தார்.

நியூஸிலாந்து தரப்பில் எல்லா பவுலர்களுக்கும் சாத்துதான். சவுதி 13 ஓவர்களில் 71 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாக்னர் 16.2 ஓவர்களில் 82 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிளைர் டிக்னர் 13 ஓவர்களில் 72 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஸ்காட் குக்கெலீன் 13 ஓவர்களில் 80 ரன்கள் கொடுகது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பவுலிங்கில் நியூஸிலாந்து 2 விக்கெட்டுகளை தாரை வார்க்க, ஆலி ராபின்சன் 1 விக்கெட்டை எடுக்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது அந்த அணி.

டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து வேறு வழியில் சுவாரஸ்யம் ஆக்கி வருகின்றது. ஆனால் மெக்கல்லத்திற்குப் பிறகு என்ன ஆகும்? ஒன்று இங்கிலாந்து பேட்டிங் ஒன்றுமில்லாமல் பூப்பூவாய் உதிர்ந்து போகும். அல்லது பெரிய உச்சங்களை எட்டும், இந்த இரண்டு முடிவுகளும் அந்த அணி வீரர்களின் பலம் மற்றும் திறமைகளைப் பொறுத்தே அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்