ரஞ்சிக் கோப்பையை வென்று புஜாராவுக்கு காணிக்கையாக்குவோம்: சவுராஷ்டிரா கேப்டன் ஜெயதேவ் உனத்கட்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வது எங்கள் மாநிலத்தின் கிரிக்கெட் ஐகானான புஜாராவுக்கு சிறந்தவொரு காணிக்கையாக இருக்கும் என தெரிவித்துள்ளார் சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லி டெஸ்ட் போட்டியில் புஜாரா தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில், இதனை தெரிவித்துள்ளார் உனத்கட்.

நாளை (வியாழன்) துவங்கும் ரஞ்சிக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வங்காளம் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டியில் சவுராஷ்டிராவை உனத்கட் கேப்டனாக வழிநடத்துகிறார். கடந்த டிசம்பரில் சவுராஷ்டிரா அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

“புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டபோது நான் இந்திய அணியில் இருந்தேன். ஆட்டத்தில் அவருடைய அணுகுமுறையில் நான் பெரிய வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைக்கும் எங்கள் மாநிலத்தின் கிரிக்கெட் ஐகானுக்கு ரஞ்சிக் கோப்பையை வென்று அதை காணிக்கை ஆக்குவது சிறந்த ஒன்றாக இருக்கும் என கருதுகிறேன். பல மில்லியன் இந்திய ரசிகர்களுக்கு அவர் இன்ஸ்பிரேஷன்.

சவுராஷ்டிரா அணி காலிறுதி மற்றும் அரையிறுதி விளையாடிய போது கூட நான், ஜடேஜா மற்றும் புஜாரா என மூவரும் அணியினருடன் தேசிய முகாமில் இருந்தபடி தொடர்பில் இருந்தோம். நிச்சயம் இறுதிப் போட்டியில் சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி பெருமை சேர்ப்போம்” என உனத்கட் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE