ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தால் முக்கிய வீரர்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரபலங்களின் கைது, உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ஒதுங்கியிருப்பது, ஐபிஎல்லுக்கு தடை விதிக்குமாறு எழுந்த கண்டனக் குரல்கள் என பல்வேறு விஷ்வரூப பிரச்சினைகளைக் கடந்து மீண்டும் புதிதாய் இன்று தொடங்குகிறது 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டதால் பிசிசிஐ, போட்டியை 2 கட்டங்களாகப் பிரித்து முதல் கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. முதல் கட்ட போட்டிகள் வரும் 30-ம் தேதி வரை இங்கு நடைபெறுகின்றன.
இந்த முறை 56 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆப், இறுதி ஆட்டம் என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் முதல் 20 லீக் ஆட்டங்கள் மட்டும் அமீரகத்தில் நடைபெறுகின்றன.
மே 2 முதல் ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு வருகிறது. பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இந்த ஐபிஎல் தொடங்கினாலும்கூட, அதன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும், ஆர்வமும் குறைந்ததாகத் தெரியவில்லை.
கடந்த முறை 9 அணிகள் விளையாடிய நிலையில், பிசிசிஐ யுடனான பல்வேறு பிரச்சினைகள் காரணமாக புணே வாரியர்ஸ் அணி நீக்கப்பட்டு, இந்த முறை 8 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. இந்த முறை முழு அளவில் ஏலம் நடத்தப்பட்டதால் சில முக்கிய வீரர்கள் அணி மாறியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசன் வரை விளையாடிய மைக் ஹசி மும்பை அணிக்கும், முரளி விஜய் டெல்லி அணிக்கும் சென்றுவிட்டனர்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் சேவாக், கேப்டன் பதவியை இழந்தபோதும் கூட அந்த அணிக்காக விளையாடிய நிலையில், இந்த முறை பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார். டெல்லிக்காக விளையாடிய மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மோர்ன் மோர்கல் இந்த முறை கொல்கத்தாவுக்காக களமிறங்குகிறார்.
மும்பை அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், டுவைன் ஸ்மித் ஆகியோர் முறையே டெல்லி மற்றும் சென்னை அணிக்கு மாறியுள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் பிரென்டன் மெக்கல்லம் இந்த முறை சென்னைக்காக ஆடுகிறார்.பெங்களூர் அணியில் கேப்டன் கோலி, கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில், இந்த முறை யுவராஜ் சிங், அல்பி மோர்கல் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்றிருப்பதால் அந்த அணியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கின் மீது அணி நிர்வாகம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் சொதப்பிய அவர் தன் மீதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மும்பை அணியில் தினேஷ் கார்த்திக், டுவைன் ஸ்மித் என இருவர் அணி மாறியிருந்தாலும், மைக் ஹசியின் வருகையால் அந்த குறை தெரியாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் அணியில் சேவாக், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன் என வலுவான வீரர்கள் உள்ளதால் இந்த முறை அந்த அணி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி, ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தால் ஏற்பட்ட கறையை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கிரிக்கெட் உலகையே உலுக்கிய ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் ராஜஸ்தான் அணியிடம் இருந்துதான் ஆரம்பமானது. வாட்சன், ரஹானே, சஞ்ஜு சாம்சன், பிராட் ஹாட்ஜ், ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டீவன் ஸ்மித் போன்ற வலுவான வீரர்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
டெல்லி அணி கடந்த சீசனில் விளையாடியவர்களில் பீட்டர்சன் தவிர முன்னணி வீரர்கள் அனைவரையும் மாற்றியமைத்துள் ளது. அந்த அணியால் ரூ. 9 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள கேப்டன் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிவிட்டதால் இந்த முறை ஐபிஎல் முழுவதும் ஆடுவார் என்பது கூடுதல் பலம். ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அந்த அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஐபிஎல் போட்டியில் 2-வது முறையாக களமிறங்கும் சன்ரைஸர்ஸ் அணி, கேப்டன் ஷிகர் தவண், டேல் ஸ்டெயின், டேவிட் வார்னர், டேரன் சமி என பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு எங்களுக்கானது, நிச்சயம் நாங்கள் கோப்பையை வெல்வோம் என பெங்களூர் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 6 போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னதாக வெளியேறியதில்லை. இதேபோல் மும்பை, ராஜஸ்தான் அணிகளும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது.
மும்பை-கொல்கத்தா இன்று மோதல்
போட்டியின் முதல் நாளான இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸும், 2012 சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.
பரிசுத் தொகை ரூ.30 கோடி
போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.30 கோடி. இது கடந்த ஆண்டைவிட ரூ.5 கோடி அதிகமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13 கோடியும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.8 கோடியும், 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.5 கோடியும், 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.4 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.
செய்தி நிறுவனங்கள் ஸ்டிரைக்
ஐபிஎல் போட்டியை படம் எடுப்பதற்கு புகைப்பட ஏஜென்சிகளுக்கு பிசிசிஐ தடை விதித்திருப்பதைக் கண்டிக்கும் வகையில் அசோசியேட் பிரஸ் (ஏபி) உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஐபிஎல் போட்டி தொடர்பான செய்திகளை சேகரிக்காது. அதேநேரத்தில் ஏபி நிறுவனத்தின் சிறிய புகைப் படக் குழு மட்டும் அங்கிருந்து படம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சுரியை நோக்கி ரெய்னா
அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவர்கள் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். இதுவரை 99 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கும்போது ஐபிஎல் வரலாற்றில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் வரிசையில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் (97 போட்டிகள்), சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 3-வது இடத்திலும் (96), சூப்பர் கிங்ஸுக்கு ஆடிய மற்றொரு வீரர் பத்ரிநாத் 4-வது இடத்திலும் (95 போட்டிகள்), பெங்களூர் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும் (93 போட்டிகள்) உள்ளனர். இவர்களில் பத்ரிநாத் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாததால் இந்த முறை விளையாடவில்லை. அவரைத் தவிர மற்ற அனைவரும் 100 போட்டிகளில் விளையாடிய பெருமையைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன்ஷிப்பில் 100
ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாக இருந்துவரும் எம்.எஸ்.தோனி, தான் விளையாடிய 96 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார். இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 4-வது லீக் போட்டியில் விளையாடும்போது கேப்டன்ஷிப்பில் சதமடிப்பார் தோனி. கடந்த 7 ஆண்டுகளில் ஒரே அணிக்கு கேப்டனாக இருந்தவர் தோனி மட்டுமே. மற்ற எல்லா அணிகளுமே கேப்டன்களையும், வீரர்களையும் அவ்வப்போது மாற்றியமைத்தபோதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் கேப்டனை மாற்றவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago