துபாய்: கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதற்கான பரிந்துரையில் நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வே மற்றும் இந்திய வீரர் முகமது சிராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்களை பின்னுக்கு தள்ளி கில் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
ஜனவரியில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 70, 21, 116, 208, 40 மற்றும் 112 ரன்களை எடுத்திருந்தார். 5 டி20 போட்டிகளில் விளையாடி 7, 5, 46, 7, 11 ரன்கள் எடுத்திருந்தார். அதன் காரணமாக 23 வயதான அவர் இந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதோடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் படைத்துள்ளனர்.
சிறந்த கிரிக்கெட் வீரராக கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பகிர்ந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என அவரை ரசிகர்கள் சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் ஜனவரி மாத சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்து அணியின் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இளையோர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றவர்.