WPL | 448 வீராங்கனைகள், 5 அணிகள்: தொடங்கியது முதல் சீசனுக்கான ஏலம்

By செய்திப்பிரிவு

மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பை நகரில் துவங்கியுள்ளது. மொத்தம் 5 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. 448 வீராங்கனைகள் இந்த லீக் சீசனில் விளையாடும் வகையில் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், அலிசா ஹீலி போன்ற நட்சத்திர வீராங்கனைகளும் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 269 வீராங்கனைகள், வெளிநாடுகளை சேர்ந்த 179 வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். வெளிநாட்டு வீராங்கனைகளில் 19 பேர் ஐசிசி அஸோஸியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் வாங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதில் 30 பேர் வெளிநாட்டினர்.

ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளை இந்த ஏலத்தில் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்தில் ரூ.12 கோடி வரை செலவிடலாம். வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ரூ. 20 முதல் ரூ.50 லட்சம் வரையில் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச போட்டிகளில் விளையாடாத வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.20 மற்றும் ரூ.10 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 4 முதல் 26 வரையில் முதல் சீசனின் போட்டிகள் நடைபெற உள்ளன.

அணிகளின் விவரம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் சீசனில் விளையாடுகின்றன.

ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெபாலி வர்மா உட்பட பல வீராங்கனைகளுக்கு இதில் அதிக டிமாண்ட் இருக்கும் எனத் தெரிகிறது. மல்லிகா சாகர், ஏலதாரராக இந்த ஏலத்தை நடத்துகிறார். மகளிர் டி20 சேலஞ்ச் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE