கே.எல்.ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம்: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு

By செய்திப்பிரிவு

மும்பை: மோசமான ஃபார்மில் சிக்கித் தவிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம் என்றுமுன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள கே.எல். ராகுலின் ஃபார்ம் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சரியாக இல்லை. நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், அவருக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்றும் அவருக்குப் பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரலாம் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியதாவது:

கே.எல். ராகுலின் தேர்வு செயல்திறனின் அடிப்படையிலானது அல்ல. மாறாக விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று நான் நினைக்கிறேன். அவரது பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து சீரற்றதாக உள்ளது. 8 ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஒருவருக்கு திறனை செயல்திறன்களாக மாற்ற முடியவில்லை.

46 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு 34 என்ற டெஸ்ட் சராசரியும், சர்வதேச கிரிக்கெட்டில் 8 வருடங்களுக்கும் மேலாகவும் நீடிப்பது அதிசயம். பல திறமையான வீரர்கள் காத்திருக்கும்போது இவர் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஷுப்மன் கில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார்.

இளம் வீரரான சர்ஃபிராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் சதங்களைக் குவித்து வருகிறார். கே.எல். ராகுலின் திறமையை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக களத்தில் அவரது செயல்பாடுகள் குறைவாக இருந்தன. ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு துணை கேப்டன் பதவி தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கே.எல். ராகுலுக்கு ஆதரவாக முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது.

கே.எல். ராகுல் கடந்த 2 ஆண்டுகளாக நன்றாகவே விளையாடி வருகிறார். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கண்டிப்பாக டெல்லியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் களம் இறக்கப்படுவார் என்பது எனது கணிப்பு. அந்தப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை ராகுலுக்கு பதிலாக விளையாட வைக்கலாம்.

நான் ஏன் ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறுவது போல் கடினமான ஆடுகளத்தில் கே.எல். ராகுல் தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்தார். அவருக்கு சிறப்பான திறமை உள்ளது.

ஆனால் கடந்த சில போட்டிகளில் அவர் ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார். பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ரன் குவிப்பது மிகப்பெரிய சவால் தான்.

அடுத்த டெஸ்டில் வாய்ப்பு தரும்போது அவர் அதைப் பயன்படுத்திஅதிக ரன்களைக் குவிக்கவேண்டும். அப்போது நிச்சயமாக அவருடைய உத்வேகம் நன்றாக அதிகரிக்கும். அதன் பிறகு அவர் அணியில் நீடிப்பார் என நம்புகிறேன். ராகுலின் திறமைக்காகவே அவருக்கு இன்னொரு வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் தரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE