WT20 WC 2023 | பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

By செய்திப்பிரிவு

கேப் டவுன்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது அந்த அணி. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

ஷெபாலி வர்மா மற்றும் யாஸ்திகா பாட்டியா இன்னிங்ஸை தொடங்கினர். யாஸ்திகா, 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் களத்திற்கு வந்தார். 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஷெபாலி வெளியேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த ரிச்சா கோஷ் உடன் 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜெமிமா. இருவரும் அப்படியே ஆட்டத்தின் அணுகுமுறையில் வேகம் கூட்டினர். அது இந்திய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பை வசம் செய்தது. ஜெமிமா, 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ், 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய அணி.

“எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பார்ட்னர்ஷிப் அமைத்தால் இலக்கை வெற்றிகரமாக விரட்டலாம் என நான் அறிவேன். வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் நானும், ரிச்சாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினோம். அதையே இன்றும் செய்தோம். ரன் எடுக்க முடியாமல் தவித்து வந்தேன். அதனால் இந்த இன்னிங்ஸ் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்” என மேன் ஆப் தி மேட்ச் விருதை வென்ற ஜெமிமா தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE