IND vs AUS 1st Test | அசத்திய அஸ்வின் 5 விக்கெட் - சுருண்டது ஆஸி.; இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த இந்தியா!

By செய்திப்பிரிவு

நாக்பூர்: அஸ்வினின் அபார பந்துவீச்சின் துணையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதன்மூலம் 223 ரன்கள் இந்தியா முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து, முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை இரண்டாவது ஓவரிலேயே அஸ்வின் பிரித்து, கவாஜாவை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னேவை 11-வது ஓவரில் ஜடேஜா அவுட்டாக்க 11 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை சேர்த்திருந்தது.

தொடர்ந்து அஸ்வின் சுழல் வேட்டையில் இறங்க, டேவிட் வார்னர் 10 ரன்களிலும், மாட் ரென்ஷா 2 ரன்களிலும் நடையைக் கட்டினர். தொடர்ந்து பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்பை (6) எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் அஸ்வின்.

இந்தப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 31-வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் அஸ்வின். அடுத்தடுத்து களத்துக்கு வந்த வீரர்களும் சோபிக்காத நிலையில் 32.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 91 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை சுவைத்தது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரோஹித் சர்மா சாதனை: நாக்பூர் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இந்த வகையில் உலக அரங்கில் இலங்கையின் திலகரத்னே தில்ஷான், தென் ஆப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ், பாகிஸ்தானின் பாபர் அஸம் ஆகியோர் ஏற்கெனவே டி 20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தனர்.

கேப்டனாக முதல் சதம்.. - நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 120 ரன்கள் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவருக்கு 9-வது சதமாக அமைந்தது. அதேவேளையில் கேப்டனாக அவர், அடித்த முதல் சதம் இதுவாகும்.

சேப்பாக்கம் நினைவுகள்.. - நாக்பூரில் ரோஹித் விளையாடிய விதம் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்க ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அற்புதமாக விளையாடி 161 ரன்கள் விளாசியிருந்தார். அதேபோன்று தற்போதும் நாக்பூரில் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

அறிமுக டெஸ்டில் 7... - நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான டாட் மர்பி 7 விக்கெட்கள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE