IND vs AUS 1st Test Day 2 | களைப்படைந்த ஆஸி. வீரர்கள்: அக்சர் - ஜடேஜா அசத்தல் கூட்டணியால் இந்தியா 144 ரன்கள் முன்னிலை

By செய்திப்பிரிவு

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய தினம் ரோகித், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பாக பேட் செய்துள்ளனர்.

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி நேற்று முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது இந்தியா.

இன்று காலை தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா தொடங்கினர். இருவரும் 42 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அஸ்வின், 62 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த புஜாரா, கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் என அனைவரும் விரைந்து தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். மறுமுனையில் ரோகித் நிலைத்து நின்று ஆடி வந்தார்.

7-வது பேட்ஸ்மேனாக களம் கண்ட ஜடேஜாவுடன் கூட்டணி அமைத்தார் ரோகித். இருவரும் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார் ரோகித். 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.

தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பரத் 8 ரன்களில் அவுட்டானார். பின்னர் அக்சர் படேல் களத்திற்கு வந்தார். 8-வது விக்கெட்டிற்கு அவருடன் இணைந்து 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஜடேஜா. இருவரும் அரைசதம் பதிவு செய்துள்ளனர். ஜடேஜா 170 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்கள் சேர்த்துள்ளார். அக்சர் படேல் 102 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்துள்ளார். இருவரும் நாளை தங்களது ஆட்டத்தை தொடங்க உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

களைப்படைந்த ஆஸி. வீரர்கள் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இதுவரை முதல் இன்னிங்ஸில் 114 ஓவர்களை வீசி உள்ளது. இதில் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான நாதன் லயன் 37 ஓவர்களும், அறிமுகம் வீரர் மர்பி 36 ஓவர்களும் வீசி உள்ளனர். பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை இந்திய வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்து ஆடுகிறார்கள். ஸ்காட் போலந்த் விக்கெட் வீழத்தவில்லை என்றாலும் அருமையான லைன் மற்றும் லெந்தில் பந்து வீசி வருகிறார்.

மர்பி 36 ஓவர்களில் 82 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கே.எல்.ராகுல், அஸ்வின், புஜாரா, கோலி மற்றும் பரத்தை அவர் வீழ்த்தி இருந்தார். லயன், சூர்யகுமார் யாதவை போல்ட் எடுத்தார். ரோகித்தும், கம்மின்ஸ் வசம் சிக்கினார்.

களத்தில் நீண்ட நேரம் பீல்ட் செய்து வரும் காரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் களைப்பாக இருந்தனர். அதன் காரணமாக இரண்டாம் நாள் இறுதியில் ஜடேஜா கொடுத்த கேட்ச் வாய்பை ஸ்லிப் திசையில் நின்றிருந்த ஸ்மித் நழுவவிட்டார். அதோடு அக்சர் - ஜடேஜா கூட்டணி ஆடிய ஷாட்கள் அவர்களை பவுண்டரி லைனில் பிஸியாக இருக்க செய்தது. எப்படியும் ஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்தில் எஞ்சியுள்ள இந்திய அணியின் அந்த 3 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்ற முயலும். அதை தவிர்க்கும் முயற்சியில் இந்திய அணி ஆட்டத்தை அணுகும். இதில் யாருக்கு வெற்றி என்பது நாளை தெரியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE