நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்தது.
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி அறிமுக வீரராக களமிறங்கினார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. உஸ்மான் கவாஜா 1 ரன்னில் மொகமது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் (1), மொகமது ஷமி பந்தில் போல்டானார். 2.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 2 ரன்கள் என்ற நிலையில் மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றது.
இதனால் மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் 76 ரன்கள் சேர்த்தது. லபுஷேன் 30, ஸ்மித் 14 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து விளையாடினர். சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜாவின் பந்தை லபுஷேன் கிரீஸை விட்டு வெளியே வந்து விளையாட முயன்ற போது ஸ்ரீகர் பரத்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இது பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
லபுஷேன் 123 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார். ஸ்மித்துடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவை (0), எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் ஜடேஜா. இதையடுத்து பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் களமிறங்கினார். 42-வது ஓவரை வீசிய ஜடேஜா, ஸ்டீவ் ஸ்மித்தை தடுமாறச் செய்தார். இதை பயன்படுத்திக் கொண்டு அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தை போல்டாக்கினார்.
ஸ்மித் 107 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். இந்த 3 விக்கெட்களையும் ஜடேஜா 27 ரன்கள் இடைவெளியில் சாய்த்தார். 82 ரன்களுக்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 109 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என சரிவை நோக்கி ஆஸ்திரேலிய அணி பயணித்தது. இந்த சூழ்நிலையிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாடி விரைவாக ரன்கள் சேர்த்தார்.
ஆனால் அதுவே அவருக்கு எதிர்வினையாகவும் அமைந்தது. அஸ்வின் வீசிய 54-வது ஓவரின் முதல் பந்தை அலெக்ஸ் கேரி ரீவர்ஸ் ஸ்வீப் விளையாட முயன்றார் அப்போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்டெம்புகளை பதம் பார்த்தது. இதனால் அலெக்ஸ் கேரி 36 ரன்களில் வெளியேறினார். 33 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை அவர், சேர்த்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 ரன்னில் அஸ்வின் பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற விராட் கோலியிடம் பிடி கொடுத்து வெளியேறினார். டாட் மர்பியை (0), ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வெளியேறச் செய்தார். சற்று நிலைத்துச் நின்று விளையாடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 84 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் நடையை கட்டினார்.
கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஸ்காட் போலண்ட் ஒரு ரன்னில் அஸ்வின் பந்தில் போல்டானார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 5 விக்கெட்களை வெறும் 15 ரன்களுக்கு தாரை வார்த்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 22 ஓவர்களை வீசி 8 மெய்டன்களுடன் 47 ரன்களை வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார். அஸ்வின் 15.5 ஓவர்ளை வீசி 2 மெய்டன்களுடன் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். மொகமது ஷமி, மொகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. தனது 14-வது அரை சதத்தை அடித்த கேப்டன் ரோஹித் சர்மா 69 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 71 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் டாட் மர்பி பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் ஆட்டம் முடியும் தருவாயில் கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ரோஹித் சர்மாவுடன், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.
12 மணிநேர பயிற்சி: நாக்பூர் டெஸ்டில் 5 விக்கெட்கள் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா கூறும்போது, “காயத்தில் இருந்து குணமடைந்து 5 மாதங்களுக்கு பிறகு விளையாடுவது அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது கடினமானது. நான் இதற்குத் தயாராக இருந்தேன், உடற்தகுதி மற்றும் திறனை மேம்படுத்துவதில் கடுமையாக உழைத்தேன்.
பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தபோது தினமும் 10-12 மணி நேரம் பந்துவீசினேன், அது எனக்கு மிகவும் உதவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் தர ஆட்டத்தில் (ரஞ்சி) விளையாடினேன், கிட்டத்தட்ட 42 ஓவர்கள் வீசினேன். அதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான நம்பிக்கையை அளித்தது. நாக்பூர் ஆடுகளத்தில் பவுன்ஸ் இல்லை, இதனால் ஸ்டெம்புகளுக்கு நேராக வீசுவதை இலக்காகக் கொண்டிருந்தேன்” என்றார்.
450 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் சாதனை: நாக்பூரில் டெஸ்ட் போட்டியில் 54-வது ஓவரை வீசிய இந்தியாவின் அஸ்வின், அலெக்ஸ் கேரியை (36 ரன்கள்) போல்டாக்கினார். டெஸ்ட் அரங்கில் அஸ்வின் கைப்பற்றிய 450-வது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் 450 விக்கெட்களை கைப்பற்றிய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின். இந்த வகையில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.
450 விக்கெட்களை விரைவாக கைப்பற்றியவர்களின் பட்டியலில் உலக அரங்கில் 2-வது இடத்தையும், இந்திய வீரர்களில் முதலிடத்தையும் அஸ்வின் பிடித்துள்ளார். இலங்கையின் முத்தையா முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். அஸ்வின் 89 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே 93 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களை சாய்த்திருந்தார்.
குறைந்த பந்துகளில் 450 விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலிலும் அஸ்வினுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ரா 23,474 பந்துகளை வீசி 450 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அஸ்வின் 23,635 பந்துகளை செலவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago