IND vs AUS முதல் டெஸ்ட் | முதல் இன்னிங்ஸில் 177 ரன்களில் சுருண்ட ஆஸி. - 5 விக்கெட் அள்ளிய ஜடேஜா

By செய்திப்பிரிவு

நாக்பூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு சூறாவளியில் சிக்கி பின்னமாகி உள்ளது ஆஸ்திரேலிய அணி. முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.

அந்த அணிக்காக வார்னர் மற்றும் கவாஜா, தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேறினர். கவாஜாவை சிராஜ் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். வார்னரை போல்ட் ஆக்கினார் ஷமி.

தொடர்ந்து லபுஷேன் மற்றும் ஸ்மித் என இருவரும் நிதானமாக இன்னிங்ஸை அணுகி அசத்தினர். இருவரும் 82 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உணவு நேர இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி சரிந்தது. லபுஷேன், 49 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் அபாரமாக அவரை ஸ்டம்பிங் செய்திருந்தார். அடுத்த பந்தில் மேட் ரென்ஷாவை வெளியேற்றினார் ஜடேஜா. தொடர்ந்து 37 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தையும் காலி செய்தார்.

பின்னர் அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மர்பி, ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் போலாந்த் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 8 மெய்டன் ஓவர்கள் அடங்கும். அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE