சூர்யகுமார் Vs ராகுல் (அ) கில் - நாக்பூர் டெஸ்ட்டில் இந்திய அணியின் செலக்‌ஷன் தலைவலி!

By ஆர்.முத்துக்குமார்

நாக்பூரில் நாளை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி வீரர்களின் பார்ம் பெரிய கவலையளிப்பதாக இருப்பதை ஒருவரும் குறிப்பிடாமல், அணிச்சேர்க்கையில் இந்தியாவின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணியின் அணித்தேர்வு தலைவலி அதன் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தினால் அல்ல. மாறாக பார்மில் இருக்கும் வீரரை தேர்வு செய்வது பற்றியே. ஸ்பின்னை நன்றாக ஆடும் ஸ்ரேயஸ் அய்யருக்குப் பதில் யாரைத் தேர்வு செய்வது? ரிஷப் பந்திற்கு பதிலாக இஷான் கிஷனா அல்லது கே.எஸ்.பரத்தா என்ற சிக்கல் வேறு உள்ளது.

டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற புதிய அலை காரணமாக சூர்யகுமார் பெயரும் அடிபடுகிறது. அணியில் ஸ்ரேயஸ் அய்யருக்குப் பதிலாக சூர்யகுமாருக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பது போல தெரிகிறது. ஆனால் உண்மையில் அந்த இடத்திற்கு ரஹானேதான் சிறப்பானவர். ஏனெனில் இன்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடாத வேளையில் உள்நாட்டுக் கிரிக்கெட்டை மதித்து ஆடி அதை சீரியசாக எடுத்துக் கொண்டு இரட்டைச் சதங்களையும் விளாசி வருகிறார் ரஹானே. ஆனால், ஸ்பான்சர்கள் லாபி இவருக்கு இல்லை. எனவேதான் விவாதம் ராகுலா? கில்லா? அல்லது சூர்யகுமாரா என்ற திசை நோக்கி இருந்து வருகின்றது.

ஷுப்மன் கில் சமீபத்தில் 7 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 4 சதங்களை விளாசியுள்ளார். அவர் இந்தச் சதங்களை எடுத்த விதம் ஸ்ரேயஸ் அய்யருக்குப் பதில் ஷுப்மன் கில் என்றுதான் இருக்க வேண்டும். ஏனெனில் கோலிக்குப் பிறகு ஒரு பெரிய வீரர் உருவாகிறார் என்றால் அது கில்தான். மாறாக சூர்யகுமார் யாதவ் சிகப்புப் பந்துக் கிரிக்கெட்டில் கொடி நாட்டியவர் அல்ல. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20-யில் மட்டுமே சாதித்தவர். ஆனால் இவரைப் போன்ற ஒரு சாதிக்க வேண்டும் என்ற வெறியுடைய ஒரு வீரரை டெஸ்ட்டில் எடுப்பதிலும் தவறில்லை.

எப்படியும் இந்தத் தொடரில் போடப்படும் குழிப்பிட்ச்களில் இரு அணிகளுமே குறைந்த ஸ்கோரைத்தான் அடிக்கும் என்பதால் ஆட்டத்தை சடுதியில் மாற்றும் பேட்டிங் திறமை கொண்ட சூர்யகுமார் யாதவ் பொருத்தமாகத்தான் தெரிகிறார். இதற்கு சான்றாக அவர் சமீபத்தில் ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிராவுக்கு எதிராக மும்பை 230 ரன்களுக்குச் சுருண்ட போட்டியில் 107 பந்துகளில் 95 ரன்கள் விளாசியதைச் சுட்டிக்காட்டலாம்.

ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு வந்துள்ளதால் ராகுல் அல்லது ஷுப்மன் கில் விட்டுக் கொடுக்க வேண்டும். வேறு ஏதாவது டவுனில் இருவரில் ஒருவரை இறக்க வேண்டும். இல்லையேல் ஒருவர் உட்கார வேண்டியதுதான். ராகுலை அணியில் எடுப்பது குறித்த தடைகளுக்குக் காரணம் அவர் வங்கதேசத்திற்கு எதிராக மொத்தமே 57 ரன்களை எடுத்து சொதப்பியதே. இவர் அணியின் துணை கேப்டன் வேறு.

எனவே சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் இருவரையும் பிளேயிங் லெவனில் எடுக்க வேண்டுமெனில் துணை கேப்டனாக இருந்தாலும் ஓரமாக உட்கார வேண்டிய நிலைதான் ராகுலுக்கு. ஆனால், ராகுல் திராவிட் இருக்க பயமேன், ராகுல் அச்சப்பட வேண்டியதில்லை. ராகுல் ஆடி அசிங்கப்படுவதை விட சூர்யகுமாருக்கோ, ஷுப்மன் கில்லுக்கோ இடம் கொடுப்பது அவரை இருவிதங்களில் காப்பாற்றி விடும்.

பந்த் இல்லாவிட்டால் இந்திய குழிப்பிட்ச்களுக்குச் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாதான், ஆனால் அவரை மெல்ல மெல்ல ஓரங்கட்டி விட்டனர். ஆகவே கே.எஸ்.பரத் தான் அந்த இடத்திற்கு வருவார் என்று தெரிகிறது. இஷான் கிஷன் வெறும் ஹைப் வீரர்.

அதே போல் அஸ்வின் நிச்சயம் இருப்பார். ஆனால், ஜடேஜாவா, அக்சர் படேலா, குல்தீப் யாதவ்வா என்பதில் சிக்கல் உள்ளது. டாஸில் இந்தியா தோற்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தால் முதல் நாள் ஆட்டத்தில் ஸ்பின் எடுக்கவில்லை எனில் குல்தீப் யாதவ் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர் மற்றும் பல தினுசுகளில் வீசும் பவுலர்தான் தேவை. இதைத்தான் ரவிசாஸ்திரியும் கூறுகிறார். அக்சர் படேல் இந்தியப் பிட்ச்களில் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஜடேஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருகிறார். ஆனால் அவரது பேட்டிங் பார்மை வைத்து அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.

குல்தீப் யாதவ் சமீபத்தில் வங்கதேசத்தில் பிளாட் பிட்சில் பந்துகளை திருப்பியதைப் பார்த்தோம். எனவே நியாயப்படி அவருக்குத்தான் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.



இந்திய அணியின் ஆடும் லெவன் இப்படி இருக்கலாம்.. - ரோகித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, கோலி, சூர்யகுமார் யாதவ்/ராகுல், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், முகமது ஷமி, ஜெயதேவ் உனத்கட்/சிராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்