‘பிட்ச் தயாரிப்பில் சுதந்திரம்’ - இயன் சேப்பல் Vs ரவி சாஸ்திரி

By செய்திப்பிரிவு

மும்பை: உலகம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களை தயாரிக்கும் பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, எதிர்வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமையும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி வியாழன் அன்று துவங்குகிறது. இந்தத் தொடரை தயாராகும் வகையிலான பயிற்சி ஆட்டத்தில் கூட விளையாட மறுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்தச் சூழலில் இயன் சேப்பல் இதனை தெரிவித்துள்ளார்.

“ஆடுகளம் குறித்த பேச்சு அதிகமாக உள்ளது. ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியது பிட்ச் தயாரிப்பாளர்தான். அந்த விஷயத்தில் அவருக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் என யாரையும் சாராது. நீங்கள் ஒரு நல்ல பிட்சை உருவாக்க வேண்டும்” என சேப்பல் தெரிவித்துள்ளார்.

முரண்பட்ட ரவி சாஸ்திரி: “எனக்கு பந்து முதல் நாளில் இருந்து திரும்ப வேண்டும். ஏனெனில், நாம் டாஸ் இழந்தால் இது உதவலாம். முதல் நாளில் கொஞ்சமாவது ஆடுகளம் பவுலர்களுக்கு உதவ வேண்டும். நாம் நமது சொந்த மண்ணில் விளையாடுகிறோம். அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE