இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும்? - அலசி ஆராயும் கிரேக் சேப்பல்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் காயங்களால் இந்திய கிரிக்கெட் அணி இம்முறை பாதிக்கப்படும் என்பதால், வரவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியும் என்று அந்த அணியின் ஜாம்பவான் கிரேக் சேப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அந்த அணி சமீபகாலங்களில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் மற்றும் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. சிறந்த பார்மில் இருப்பதால் இந்திய மண்ணில் 19 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது ஆஸ்திரேலிய அணி.

கடைசியாக ஆஸ்திரேலிய அணி கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது. ஆனால் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளையும் இழந்து தொடரை 1-2 என பறிகொடுத்தது. மறுபுறம் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் 15 டெஸ்ட் தொடர்களை வென்று குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் விளையாடவில்லை. கார் விபத்தில் சிக்கிய அவர், இந்த ஆண்டு இறுதி வரைவிளையாடுவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது. அதேவேளையில் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இவர்கள் இருவரும் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் இதனால் ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல முடியும் என்றநம்பிக்கை உள்ளதாகவும் ஆஸி. முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இம்முறை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஜஸ்பிரீத் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதனால் சமீப காலங்களில் இல்லாததை விட இம்முறை இந்தியா தங்களது சொந்த மண்ணில் பாதிப்பை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள் விராட் கோலியையே பெரிதும் நம்பியிருப்பார்கள்.

இந்தியாவுக்கு வருகை தரும் அணிகள் பெரும்பாலும் சுழலால் ஏமாற்றப்படுகின்றன. எனினும் திடீரென்று ஒரு வெறித்தனமான வேகத்தால் அதை மாற்ற முடியும். இந்தியர்கள் அதற்கு பழகி விட்டனர். எனவே மனதளவில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் விரைவாக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதனால்நேதன் லயனுடன் இணைந்து அஸ்டன் அகர் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கைவிரல் ஸ்பின் எப்போதுமே துல்லியமாக இருக்கும்.

619 விக்கெட்களை வீழ்த்திய அனில் கும்ப்ளே அரிதாகவே நேராகவும், நெருக்கமாகவும் பந்துகளை வீசுவார். அவர் எப்போதும் வேகம், பிளாட் லெக் பிரேக்ஸ் ஆகியவற்றை பின்பற்றி ஸ்டெம்புகளை தாக்கும் அச்சுறுத்தலை கொடுப்பவராக இருந்தார். அதை தவற விட்டால் நாம் ஆபத்தில் சிக்கி விடுவோம் என்பதை பேட்ஸ்மேன்கள் அறிவார்கள். ரவீந்திர ஜடேஜாவும் அவரை போன்றே பந்து வீசக்கூடியவர்.

ஆஸ்திரேலிய அணியில் அஸ்டன் அகரும் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும். சுழற்பந்து வீச்சு தாக்குதலின் தலைவராக இருந்து நேதன் லயன் வழிகாட்ட வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் டேவிட் வார்னர் சீரான பார்மில் இல்லை. அவர், இந்தியாவில் தனது டெஸ்ட் சாதனையை மேம்படுத்த வேண்டும்.

உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி,டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் எதிர்கொண்டதை விட சிறந்த,தரமான சுழலுக்கு எதிராக சோதிக்கப்படுவார்கள். மார்னஷ் லபுஷேன் பெரிய சோதனையை துணைக் கண்டத்தில் எதிர்கொள்வார். மேலும் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் திறன் கவனம் பெறும்.

பந்து வீச்சின் போது இந்திய ஆடுகளங்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம். இந்ததொடருக்கான ஆடுகளங்களை பொறுத்தவரையில் டெல்லி, தரம்சாலா இந்திய அணியின் கோட்டையாக இருக்கும்.

நாக்பூர் சிவப்பு மண் ஆடுகளமாகும். பந்துகள் திரும்பாதவரை முதல் மூன்று நாட்களில் பேட்டிங் சிறப்பாக இருக்கும். அகமதாபாத்தில் சிவப்பு மற்றும் கருப்பு மண் ஆடுகளங்கள் உள்ளன. டெஸ்ட் தொடரை இந்தியா எப்படி கொண்டு செல்லும் என்பதை இது தீர்மானிக்கக்கூடும்.

வெற்றி பெறுவதற்கு ஆஸ்திரேலிய அணி புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். பந்து மென்மையாக மாறும் போது சிக்கனமாக வீச வேண்டும்,பின்னர் பழைய பந்தை ரிவர்ஸ்-ஸ்விங் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில் சுழல் ஓர் ஆயுதமாக இருக்கும். ஆனால் நாம் எப்போதும் நான்கு சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் கேமரூன் கிரீனுடன் களமிறங்க வேண்டும். நான் இந்தியாவில் நடைபெற்ற நிறைய டெஸ்ட் போட்டிகளைப் பார்த்திருக்கிறேன், அது உடல் திறன்களைப் போலவே மனதிற்கும் ஒரு போர். இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடல், பொறுமை மற்றும் விடாமுயற்சி தேவை.

இவ்வாறு கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்