தோனியை போன்று விளையாடுவதில் தவறு இல்லை - மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்ள கற்றுக்கொண்டுள்ளதாக இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி 20 கிரிக்கெட்போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார். அவர், இந்தத் தொடரில் பேட்டிங்கில் 66 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் 5 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

போட்டி முடிவடைந்ததும் 29 வயதான ஹர்திக் பாண்டியா கூறியதாவது: உண்மையைக் கூறவேண்டுமென்றால் எப்போதுமே சிக்ஸர் அடிப்பதை ரசிப்பேன். ஆனால் இப்போது நான் கொஞ்சம் மாறி விட்டேன். நிலைத்து நின்று விளையாட கற்றுக்கொண்டுள்ளேன். இதனால் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் கொஞ்சம் குறைய நேரிடும்.

பார்ட்னர்ஷிப் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. இதையும் கவனத்தில் கொண்டுள்ளேன். எனது அணியினருக்கும் களத்தில் என்னுடன் இருக்கும் வீரருக்கும் அதிக அமைதியையும் குறைந்தபட்சம் நான் இருக்கிறேன் என்ற உறுதியையும் கொடுக்க விரும்புகிறேன்.

இப்போது உள்ள அணியில் அனைத்து வீரர்களையும் விட நான் அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். எனவே அனுபவத்தை அறிந்திருக்கிறேன். அழுத்தத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதை கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் அழுத்தத்தை எப்படி விழுங்குவது என்றும் அணி அமைதியாக இருப்பதை உறுதிப்படுத்துவது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டுள்ளேன்.

பேட்டிங்கில் கீழ் வரிசையில் இறங்குவது குறித்து பிரச்சனை இல்லை. பேட்டிங்கில் தோனி செய்ததுபோன்ற பணியை மேற்கொள்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் அணியில் இருந்த போது நான்இளம் வீரராக இருந்தேன். மைதானத்தை சுற்றிலும் பந்தை பறக்கவிடுவேன்.

ஆனால் தற்போது அவர், அணியில் இருந்து சென்றுவிட்டார். திடீரென அந்த பொறுப்பு என் மீது விழுந்துவிட்டது. எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கிறது. இதனால் நான் மெதுவாக விளையாடுவது குறித்து கவலைப்படவில்லை. இதேபோன்று பந்து வீச்சில் புதிய வீரர் ஒருவர் வந்து தொடக்க ஓவரை வீசும் கடினமான பணியை மேற்கொள்வதை நான் விரும்பவில்லை.

ஏனெனில் அவர்கள் அழுத்தத்திற்கு உள்ளானால், நாங்கள் ஆட்டத்தை துரத்த வேண்டிய நிலை உருவாகும். இதனால்தான் டி 20 போட்டியில் முதல் ஓவரை நான் வீசுகிறேன். எப்போதுமே அணியை முன்னின்று நடத்த வேண்டும் என்று விரும்புவேன். புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொண்டு வருகிறேன். அது எனக்கு உதவுகிறது. இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE