கிம்பர்லியில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரை 1-2 என்று இங்கிலாந்து இழந்தாலும் இந்தப் போட்டியில் 6 தென் ஆப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி 2 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பின் தன் மீள் வரவை வலுவாக நிகழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தான் தயார் என்று சொல்லாமல் சவால் விடுத்துள்ளார். அதோடு உலகக்கோப்பை அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளார் ஆர்ச்சர்.
2-வது ஒருநாள் போட்டியில் 343 ரன்களை அனாயசமாக விரட்டியதையடுத்து 3-வது போட்டியிலும் டாஸ் வென்ற கேப்டன் தெம்பா பவுமா, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அதற்குத் தகுந்தாற்போல் இங்கிலாந்தும் சொதப்ப. லுங்கி இங்கிடி அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஜேசன் ராய் (1), பென் டக்கெட் (0), ஹாரி புரூக் (6) ஆகியோர் வெளியேற இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்களை எடுத்து சரிவில் இருந்தது.
ஆனால், அதன் பிறகுதான் டேவிட் மலான் (131), கேப்டன் ஜாஸ் பட்லர் (118) இணைந்து 232 ரன்களைச் சேர்த்தனர். மொயின் அலி 23 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 41 ரன்களை விளாசி இருந்தார். டெய்ல் எண்டர்கள் தங்களது பங்களிப்பை கொடுக்க இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்களை எட்டியது. இங்கிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். யான்சென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி மொத்தம் 19 சிக்ஸ், 16 பவுண்டரிகளை விளாசி இருந்தது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நன்றாக இலக்கை விரட்டித்தான் வந்தது. ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் தன் பழைய ஆக்ரோஷ பவுலிங்கை கண்டுப்பிடித்துக் கொண்டதையடுத்து 40 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா 287 ரன்கள் வரை வந்து தோல்வி கண்டது.
» உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்: ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்
» ரூ.44,000-ஐ நெருங்கும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு
ஆர்ச்சர் முதலில் வான் டர் டியூசன் விக்கெட்டை வீழ்த்தினார். இவர் பந்தை ஸ்லாஷ் செய்து பாயிண்டில் ஜேசன் ராய் கையில் கொடுத்தார். அடுத்த பந்துதான் அவர் பழைய பன்னீர் செல்வமாக வந்ததைக் காட்டிய பந்து. மார்க்ரம் இறங்கிய முதல் பந்தே 146 கிமீ வேகம் வீச பந்து அவரது தோளைப் பதம் பார்த்தது.
ஆனால், மார்க்ரம் சும்மா இருப்பாரா அடுத்த பந்தை நேராக பவுண்டரி அடித்து பன்னீர் செல்வமாக வந்த ஆர்ச்சரை சூடேற்றினார். முன்னதாக, தெம்பா பவுமா தொடரை வென்ற சதத்திற்குப் பிறகு நேற்றும் அற்புதமாக ஆடினார். 16 பந்துகளில் 22 ரன்கள் விரைவாக எடுத்தார். அதில் கிறிஸ் வோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் மேல் அடித்த சிக்ஸ் அற்புதமான ஷாட். ஆனால், பவுமா 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து வோக்ஸின் ஸ்லோயர் ஒன்னில் கேட்ச் ஆனார்.
ரீசா ஹென்ரிக்ஸ் 23 பந்துகளில் 4 ரன்களில் இருந்தவர் 61 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இவரை ரஷீத் பவுல்டு செய்து அனுப்பினார். எய்டன் மார்க்ரம் 35 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆர்ச்சரின் லெக் கட்டர் ஷார்ட் பிட்ச் பந்துக்கு மொயின் அலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். டேவிட் மில்லர் இறங்கி மொயின் அலியின் முதல் பந்தை கவரில் பவுண்டரி விளாசினார். பிறகு அலியை இறங்கி சிக்ஸ் விளாசினார். ஆனால், ஆர்ச்சர் பந்தை எழும்பச் செய்ய லெக் திசையில் பிளிக் செய்ய முயன்ற மில்லரின் மட்டை உள்விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது.
கிளாசன் (80) அட்டகாசமாக ஃபைட் செய்தார். மொயின் அலியை ஒரே ஓவரில் 14 ரன்கள் விளாசினார். மறுமுனையில் பார்னெல் (34) ஸ்டாண்ட் கொடுத்தார். கிளாசன் 62 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய சமயத்தில் ஆர்ச்சர் பந்தை கொடியேற்றினார். பென் டக்கெட் கேட்சை எடுத்தார். இதுவும் ஷார்ட் பிட்ச், சற்றே எழும்பிய பந்து. இந்த கேட்ச் அருமை. வெய்ன் பார்னெல் ஆர்ச்சர் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை சற்றே ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்று மிடில் ஸ்டம்பை இழந்து வெளியேறினார். பிறகு தப்ரைஸ் ஷம்சியின் குச்சியையும் பெயர்த்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5+ விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆர்ச்சர் அசத்தினார். இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தின் தொடர் 5 போட்டி தோல்வி முடிவுக்கு வந்தது. அதற்கு காரணம் ஆர்ச்சர்.
முன்னதாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்த போது 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பட்லரும் முதலில் தடுமாறினார். 14 பந்துகளில் முதல் ரன்னை எடுத்தார். அப்போதே அவரை வீழ்த்தியிருக்க வேண்டும். பவுமா அவ்வளவு நுட்பமான கேப்டன் அல்ல. ஆனால், மார்க்ரம் வந்தவுடன் அவரை சிக்ஸ் அடித்து ஊக்கம் பெற்றார் பட்லர். தன் அரைசதத்தை 64 பந்துகளில் எடுத்தார். இது பட்லரின் ஸ்லோ இன்னிங்ஸ் என்றுதான் கூற வேண்டும். மலான் 79 பந்துகளில்தான் அரைசதம் கண்டார்.
ஆனால், அதன் பிறகு மலான் வெளுத்துக் கட்டினார். அடுத்த 50 ரன்களை 27 பந்துகளில் விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் தன் 3வது சதத்தை எடுத்தார். ஒரு கட்டத்தில் இருவருமே சாத்த ஆரம்பித்தனர், யான்சென் ஓவரில் 18 ரன்களை விளாசினர். இதில் மலான் மட்டுமே 17 ரன்களை எடுத்தார். பட்லர், அதற்கடுத்து 42 பந்துகளில் 50 ரன்கள் விளாசி தன் 11-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். மொயின் அலியும் சுதந்திரமாக ஆட இங்கிலாந்து 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் என்ற நிலையில் இருந்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்களை குவித்தது. அதாவது 40 ஒவர்களில் 326 ரன்களைக் குவித்தது. ஆட்ட நாயகன் தொடர் நாயகன் இரண்டுமே பட்லர்தான்.
தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை சிக்கல்: இந்தப் போட்டியில் தோற்றதால் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பைக்கு தானாகவே தகுதி பெறுவது மேலும் சிக்கலாகியுள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இதோடு நியூசிலாந்து - இலங்கை ஒருநாள் தொடரில் நியூசிலாந்து குறைந்தது ஒரு போட்டியிலாவது வெல்வதை தென் ஆப்பிரிக்கா தன் தகுதிக்காக எதிர்நோக்க வேண்டி வரும். இப்போது ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் 8-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 9-வது இடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago