IND vs NZ 2-வது டி20 | 99 ரன்களில் நியூஸிலாந்தை சுருட்டிய இந்திய பவுலர்கள்

By செய்திப்பிரிவு

லக்னோ: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஏனெனில் இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 5 டி20 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிதான் வெற்றி பெற்றுள்ளதாக தகவல். அதனால் நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கலாம்.

இருந்தும் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் 13 ஓவர்களை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் வீசி இருந்தனர். இறுதி ஓவர்களில் அர்ஷ்தீப் சிங், 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

நியூஸிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் யாருமே 20 ரன்களை கடக்கவில்லை. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சான்ட்னர் 19 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது 100 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE