சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸில் 5-ம் நாளான இன்று 207 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்தை 4-0 என்று வீழ்த்தியுள்ளது.
103/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 49 ஓவர்களில் மேலும் 104 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது; அதிலும் குறிப்பாக 192/4 என்ற நிலையிலிருந்து அடுத்த 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்பது கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் அணிக்கு நிச்சயம் உகந்ததல்ல. ஜடேஜா இங்கிலாந்து பேட்டிங்கை சீட்டுக்கட்டாக சரித்தார்.
குக், ஜெனிங்ஸிற்குப் பிறகு இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் ஷாட் தேர்வு மோசமாக அமைந்ததும் ஒரு காரணம், பிட்சில் பெரிய பூதம் ஒன்றுமில்லை. 4-ம் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் ஒருவரே 303 ரன்கள் அடித்திருக்கும் போது, 5-ம் நாளில் 104 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழப்பது இங்கிலாந்து போன்ற அணி துணைக்கண்டத்தில் ஆடுவதை எவ்வளவு விரயமாக கருதுகின்றனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ரவீந்திர ஜடேஜா 25 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது ஜடேஜாவின் மிகச்சிறந்த பந்து வீச்சாகும். அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்த, 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் அதிவிரைவு 250 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்பிருந்த அஸ்வினுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் 69 ஓவர்கள் வீசியும் 1 விக்கெட்தான் கிடைத்தது. இங்கிலாந்து அஸ்வினை இந்த போட்டியில் சிறப்பாக ஆடியுள்ளது என்றே தெரிகிறது.
12/0 என்று தொடங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அலஸ்டைர் குக், ஜெனிங்ஸ் உணவு இடைவேளை வரை அனைத்து அழுத்தங்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு 97/0 என்று முடித்தனர்.
உணவு இடைவேளையின் போது 47 ரன்களில் இருந்த அலஸ்டைர் குக், 49 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் இந்தத் தொடரில் 6-வது முறையாக வீழ்ந்தார். இம்முறை ஜடேஜாவின் வழக்கமான பந்தை லெக்ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜெனிங்ஸ் மீண்டும் ஒரு அருமையான இன்னிங்சை ஆடி 121 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் கட்டுக்கோப்பை சிதைக்கும் நோக்கத்துடன் இறங்கி வந்து அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தின் முக்கிய வீரர் ஜோ ரூட் 22 பந்துகள் ஆடி பவுண்டரி இல்லாமல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆனார். இந்த ஷாட் தேர்வும் மோசமானதே அதுவும் 2 விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் ஜடேஜாவின் ஃபுல் பந்தை ஸ்வீப் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்றார், கோலி வெற்றிகரமாக ரிவியூ செய்தார்.
கோலி கேப்டன்சியும் அருமையாக அமைந்தது. ரிவர்ஸ் ஸ்விங்கை எதிர்பார்த்து இசாந்த் சர்மாவுக்கு ஒரு சில ஓவர்களை அவர் கொடுக்க, இங்கிலாந்தின் இந்த தொடர் சிறந்த வீரர் ஜானி பேர்ஸ்டோவை அவர் அடுத்ததாக வீழ்த்தினார். இந்த ஷாட்டும் தேவையில்லாத ஒரு ஷாட்தான், காற்றில் பிளிக் அடித்தார் லெக் திசையில் ஜடேஜா அருமையாக ஓடிப்பிடித்தார், பார்ப்பதற்கு எளிமையான கேட்சாக இருந்தாலும் கடினமான கேட்ச் ஒன்றை பிடித்தார் ஜடேஜா.
மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் இணைந்து தேநீர் இடைவேளை வரை மேலும் விக்கெட்டுகள் சரியாமல் 167/4 என்று கொண்டு சென்றனர்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதலில் மொயின் அலி 44 ரன்களில் மிக மோசமாக ஜடேஜா பந்தை ஸ்லாக் செய்து அஸ்வினிடம் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 23 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் அடுத்ததாக ஜடேஜா பந்தை நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
டாசனை கூக்ளியில் அமித் மிஸ்ரா பவுல்டு செய்தார். அடில் ரஷீத் 2 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தை லெக் திசையில் அடிக்க நினைத்தார் பந்து வெளி விளிம்பில் பட்டு பாயிண்டில் கேட்ச் ஆனது. அதன் பிறகு பிராட், பட்லர் 7 ஓவர்களை ஓட்டினர். இந்நிலையில் இன்னிங்ஸில் 88வது ஓவரை வீச வந்த ஜடேஜா, ஒரே ஓவரில் பிராட் (1), பால் (0) ஆகியோரை வீழ்த்த பட்லர் 50 பந்துகள் தீரத்துடன் போராடி 6 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து 88 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்களில் படுதோல்வி கண்டு தொடரை 4-0 என்று இழந்தது.
தொடரில் 2-வது முறையாக இங்கிலாந்து 400 ரன்களுக்கும் மேல் எடுத்த நிலையிலும் விராட் கோலி படையினர் வெற்றியை ஈட்ட முடிந்துள்ளது. சென்னையில் கே.எல்.ராகுலின் 199 ரன்களும், கருண் நாயரின் சற்றும் எதிர்பாராத முச்சதமும் 282 ரன்கள் முன்னிலையைப் பெற்றுத்தர வெற்றி சாத்தியமாகியுள்ளது.
இங்கிலாந்து துணைக்கண்டங்களில் நன்றாக ஆடுவதற்கான மன நிலையை வளர்த்துக் கொள்வது நல்லது. தோல்வியோ, டிராவோ இந்தியாவை விட்டு உடனே இங்கிலாந்து சென்று விட வேண்டும் என்ற மனநிலை அவர்களது பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் தெரிந்தது, பீல்டிங்கும் கை கொடுக்கவில்லை. இங்கிலாந்து நிச்சயம் தவற விட்ட வாய்ப்புகளை நினைத்து நினைத்து வருத்தமடையக் கூடும்.
இந்த ஆண்டில் 8-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து விட்டு இன்னிங்ஸ் தோல்வி அடைவது (மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்வி) நிச்சயம் இங்கிலாந்து தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் உருவாக்கத்தையே தீவிர சுய பரிசோதனைக்கு உட்படுத்துவதன் தேவையை உருவாக்கியுள்ளது.
ஆட்ட நாயகன்: முச்சத நாயகன் கருண் நாயர்.
தொடர் நாயகன்: விராட் கோலி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago