சச்சின், கோலி... யார் சிறந்த வீரர்? - கபில் தேவ் ருசிகர பதில்

By செய்திப்பிரிவு

மும்பை: கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர் யார் என்ற விவாதம் எப்போதும் படு வைரலாக விவாதிக்கப்படும். இதில் சச்சின் மற்றும் கோலியை தவிர்க்கவே முடியாது. இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை குவித்துள்ள வீரர்கள். இதில் சச்சின் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். கோலி 74 சதங்களை பதிவு செய்த நிலையில் விளையாடி வருகிறார்.

விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் பதிவு செய்துள்ள 49 சதங்கள் என்ற எண்ணிக்கையை கோலி சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சச்சினின் 100 சத சாதனையை தகர்க்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சச்சின் - கோலி என இருவரில் யார் சிறந்த வீரர்? என்ற கேள்வியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இடம் தனியார் செய்தி நிறுவனம் எழுப்பியது. அதற்கு தனது பதிலை அவர் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு காலத்திலும் சிறந்த வீரர்கள் தங்கள் திறனை நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. அதனால் யாரேனும் ஒருவர் அல்லது இருவரை சிறந்த வீரராக பிக் செய்ய முடியாது. இதில் எனது சொந்த விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம்.

எங்கள் காலத்தில் சுனில் கவாஸ்கர் சிறந்து விளங்கினார். பின்னர் திராவிட், சச்சின், சேவாக் ஆகியோர் வந்தனர். தற்போது ரோகித், கோலி ஆகியோர் உள்ளனர். அடுத்த தலைமுறையை சேர்ந்த சிறந்த வீரர்களும் அடையாளம் காணப்பட உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE