யார் வேர்ல்ட் கிளாஸ் வீரர், எது உலகத் தரமான ஆட்டம்? - இயன் சாப்பலை முன் வைத்து சில சிந்தனைகள்!

By ஆர்.முத்துக்குமார்

இன்றைய தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள், குறிப்பாக இளம் ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் எண்ணிக்கைக்காகப் பார்த்து வியக்கின்றனர். இத்தனை ஆயிரம் ரன்கள், இத்தனை சதங்கள், இத்தனை விரைவு கதியில் இத்தனை ரன்களா என்று விராட் கோலியையும் ரோஹித் சர்மாவையும், சூரியகுமார் யாதவ்வையும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை முன் வைத்து வியப்படைகின்றனர், புகழாரம் சூட்டுகின்றனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றாலும் இதே அளவு கோலை வைத்து கடந்த கால கிரேட்களை அவர்கள் மதிப்பிட்டு ஒன்றுமில்லை என்று கூறும்போது இவர்களுக்கு கிரிக்கெட் வரலாற்றுப் பாடம் அவசியம் என்று தோன்றுகிறது.

அன்று விராட் கோலி வேர்ட்ல்ட் கிளாஸ் வீரரா, கிரேட் பிளேயரா என்று கேட்டு எழுதியிருந்தோம். அதற்கு சுனில் கவாஸ்கர், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களை உதாரணம் காட்டினோம், கிரேம் ஹிக்கின் ஒரு அற்புதமான இன்னிங்ஸை வர்ணித்தோம், ஆனால் வாசகர்கள் சிலர் கொச்சையாக எதிர்வினை புரிந்தனர் அதை விட்டு விடுவோம், ஆனால் கவாஸ்கரைப் பற்றி கூறும்போது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர் 60 ஓவர் ஆடி 36 நாட் அவுட் என்று ஆடியதைக் குறிப்பிட்டு ஒரே தருணத்திற்கு அந்த கிரேட் பிளேயரின் கிரிக்கெட் சகாப்தத்தைக் குறுக்கி புரிந்து வைத்துள்ளனர். இது கிரிக்கெட் வரலாற்றுப் பிரக்ஞையற்ற வெற்றுப் பேச்சு வெற்றுக் கருத்து என்பதைத் தாண்டி வேறு எதுவும் அல்ல.

ஏனெனில் இதே கவாஸ்கர்தான் 1983 உலகக்கோப்பையை வென்ற பிறகு மே.இ.தீவுகள் அணி இந்தியா வந்தபோது கான்பூர் டெஸ்ட் போட்டியில் மால்கம் மார்ஷல் வீசிய அதிவேக எகிறு பந்தை மட்டையை உயர்த்தி தடுத்தாட முயன்ற போது மட்டை பறந்து போனது, ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி பேட் பறந்து சென்று விழுந்த இடத்திலிருந்து எடுத்துக் கொண்டு சென்றார். சரி! கவாஸ்கர் கதை அவ்வளவுதான். டான் பிராட்மேனின் 29 சத சாதனையை உடைக்க வேண்டும் குறைந்தது எட்ட வேண்டும் என்ற கவாஸ்கரின் கனவு நிறைவேறாது என்றே அப்போது சுனில் கவாஸ்கர் பற்றிய பேச்சாக இருந்தது.

ஆனால் அடுத்த டெல்லி டெஸ்ட் போட்டியின் போது கான்பூர் டெஸ்ட்டில் மார்ஷல் பந்தில் பேட் பறந்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப் பட்ட போது, அவர் கூறினார், ‘மார்ஷல் பந்து வழக்கத்தை விட வேகம் அதிகமானது, நான் எப்போதும் பவுன்சரை மட்டையை உயர்த்தி தடுத்தாடி அது என் காலின் கீழ் விழ வேண்டும் என்ற நினைப்பில் ஆடினேன், ஆனால் கூடுதல் வேகம் மட்டையை கையில் இருந்து பிடுங்கிச் சென்றது. இந்த டெல்லி டெஸ்ட்டில் நான் ஹூக் ஷாட்களை ஆடப்போகிறேன்’ என்றார்.

கவாஸ்கர் ஹூக் ஷாட் ஆடுவதா என்று பலரும் கேலி, கிண்டல் செய்தனர், ஆனால் அன்று கவாஸ்கருக்கு கிளைவ் லாய்ட் டீப் ஸ்கொயர் லெக், டீப் பைன் லெக், டீப் மிட் விக்கெட் வைத்து போட வேண்டியதாயிற்று. 3 ஹூக் சிக்சர்களை விளாசினார், மே.இ.தீவுகளின் பவுலர்கள் குத்தக் குத்த வெளுத்து வாங்கி 95 பந்துகளில் அதிவேக சதமெடுத்தார். இது 60 ஓவர்களில் 36 எடுத்ததை நினைத்து நகைக்கும், கவாஸ்கரைக் குறைக்கும் நைண்டீஸ் கிட்ஸ்களூக்கோ, அல்லது 2000 கிட்ஸ்களுக்கோ தெரியுமா என்பதே நம் கேள்வி. இந்த இன்னிங்ஸ்க்கு முன்னரே சுனில் கவாஸ்கர் 1982-ல் மே.இ.தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது பெர்பைசில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கவாஸ்கர் 117 பந்துகளில் 90 ரன்கள் விளாசியதும் நடந்தது, அந்தப் போட்டியில் கபில் தேவ் 38 பந்துகளில் 72 ரன்களை விளாசினார், மே.இ.தீவுகளில் மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், வின்ஸ்டன் டேவிஸ் போன்ற கதிகலக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இந்தியா 282 ரன்களைக் குவிக்க மே.இ.தீவுகள் 255 ரன்களுக்கு மடிந்து தோற்றதுதான் 1983 உலகக்கோப்பையில் கபில்தேவ் மே.இதீவுகளை வீழ்த்தி கோப்பையை வெல்ல வைத்த பெரும் நிகழ்வுக்கு முன்னோட்டமாக அமைந்தது. ஆகவே கவாஸ்கரைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றுப் பக்கங்களைப் புரட்ட வேண்டும்.

டக் வால்டர்ஸ் பற்றி இயன் சாப்பல்:

எது உலகத்தரமான ஆட்டம், யார் உலகத்தரமான வீரர் என்பதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், கிரிக்கெட் வல்லுநர் இயன் சாப்பல் தன் காலத்தில் தன்னுடன் ஆடிய டக் வால்ட்டர்ஸ் பற்றி கூறியதை உலகத்தரமான இன்னிங்ஸ், உலகத்தரமான வீரர் யார் என்ற நிரூபணத்திற்கு ஒரு சுய தேற்றமாக எடுத்துக் கொள்ளலாம்.

டக் வால்டர்ஸ் மூன்று முறை சர்வதேசப் போட்டிகளில் ஒரு செஷனிலேயே சதம் எடுத்த வீரர், அப்போதெல்லாம் இது பெரிய விஷயம் ஹெல்மெட் கிடையாது, பவுன்சர் கட்டுப்பாடுகள் கிடையாது, பிட்ச் கவர் செய்யப்படாதது, ஆகவே ஒருநாள் இருந்தது போல் பிட்ச் மறுநாள் இருக்காது.

இப்போது போல் மட்டைப் பிட்சைப் போட்டு வைத்துக் கொண்டு கத்துக் குட்டி அணிகளை அழைத்து போட்டு சாத்து சாத்து என்று சாத்துவது என்ற பேச்சுக்கே அப்போது இடமில்லை. இந்நிலையில்தான் இயன் சாப்பல், டக் வால்டர்ஸ் பற்றி கூறுவது இந்தக் காலக்கட்டத்திய ஐபிஎல், டி20 ரசிகமணிகளுக்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

டக் வால்டர்ஸ் மே.இ.தீவுகளுக்கு எதிராக மே.இ.தீவுகளில் 1973-ம் ஆண்டு டிரினிடாடில் ஆடிய ஒரு அதியற்புத இன்னிங்ஸ் பற்றி கூறுகிறார். அதாவது ட்ரினிடாட் பிட்ச் மே.இ.தீவுகளின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் லான்ஸ் கிப்ஸுக்கு உதவக்கூடியது. அதுவும் அந்தப் பிட்சில் ஆஃப் ஸ்பின்னருக்கான குட் லெந்த் ஸ்பாட்டில் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஒரு சிறு பள்ளம் இருந்ததால் கிப்ஸ் பந்துகள் ஒன்று பயங்கரமாகத் திரும்பின அல்லது எகிறின, அல்லது தாழ்வாக உள்ளே திரும்பின. ஆடுவது மிகமிகக் கடினம் என்கிறார் இயன் சாப்பல்.

அப்போது இயன் சாப்பலின் சகோதரன் கிரெக் சாப்பல், உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் அவுட் ஆனார். அடுத்து டக் வால்டர்ஸ் இறங்குகிறார். பொதுவாக ஆஃப் ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக ஆட முடியாத கடினமான ஷாட் கவர் ட்ரைவ் ஆகும். அதுவும் பிட்சில் பந்துகள் திரும்பி எழும்பும்போது நிற்பதே கடினம் இதில் எங்கு கவர் ட்ரைவ் ஆடுவது? ஆனால் டக் வால்டர்ஸ் இறங்கி முதல் பந்திலேயே அதே பள்ளத்தில் பிட்ச் ஆன கிப்ஸ் பந்தை கவர் டிரைவ் அடித்தார். அதன் பிறகு வால்டர்ஸை நிறுத்த முடியவில்லை உணவு இடைவேளக்கும் தேநீர் இடைவேளைக்கும் இடையே 102 ரன்கள் எடுத்தார் டக் வால்டர்ஸ்.

இதில் இயன் சாப்பல் குறிப்பிடும் ஒரு நிகழ்வு என்னவெனில், லான்ஸ் கிப்ஸ் வீசிய ஒரு ஓவரில் ஒரு பந்தை காலியாக இருந்த மிட்விக்கெட்டில் புல்ஷாட் ஆடுகிறார் டக் வால்டர்ஸ். உடனே பாயிண்ட்டில் நிற்கும் வீரரை கிப்ஸ் மிட் விக்கெட்டுக்கு வரும்படி பணிக்கிறார். அடுத்த பந்தை, அதுவும் திரும்பும் ஆஃப் ஸ்பின் பந்தை லெக் ஸ்டம்பில் லேசாக ஒதுங்கிக் கொண்டு ஆளில்லாத பாயிண்ட் பவுண்டரிக்கு விரட்டுகிறார் வால்டர்ஸ். உடனே கிப்ஸ் அந்த மிட் விக்கெட் வீரரை மீண்டும் பாயிண்ட்டுக்கு அனுப்புகிறார், ஆனால் அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் பந்தாக இல்லாத போதும் வால்டர்ஸ் மீண்டும் காலியான மிட் விக்கெட் பவுண்டரிக்கு அனுப்புகிறார். இந்த 3 பந்தும் கிட்டத்தட்ட ஒரே லெந்தில் பிட்ச் ஆன பந்துகள்தான் என்கிறார் இயன் சாப்பல். இதுதான் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கத்தின் உச்சம். டக் வால்டர்ஸ் போல் அதற்குப் பிறகு பலரும் ஆடியிருக்கலாம் அல்லது ஆடாமல் இருக்கலாம் ஆனால் இதுதான் கிரிக்கெட்டின் தரம், தரமான கிரிக்கெட் ஆட்டம்! அதை இவ்வளவு உன்னிப்பாக இயன் சாப்பலைத் தவிர யாரும் கவனித்திருக்க முடியாது. இன்று கிரிக்கெட் வர்ணனையின் தரமும் படுகுழியில் விழுந்து விட்டது. கிரிக்கெட் ஆட்டம் பற்றிய பார்வைகளும் புள்ளி விவரங்களில் சரிந்து விட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்