IND vs NZ | முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வருகை தந்துள்ளது. இதில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்திய அணியில் இந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விளையாடவில்லை. இதனால் அவரது இடத்தில் நடு வரிசையில் இஷான் கிஷன் களமிறங்குவதை கேப்டன் ரோஹித் சர்மா உறுதி செய்துள்ளார். இஷான் கிஷன் களமிறங்குவதால் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்துக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால் ஒவ்வொரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வெற்றிகளை கட்டியெழுப்புவதில் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும். இலங்கை தொடரில் இருந்து இந்திய அணிக்கு இரு சாதகமான விஷயங்கள் கிடைக்கப்பெற்றது. ஒன்று பேட்டிங்கில் டாப் ஆர்டரில் உள்ள 3 வீரர்களுமே பார்முக்கு திரும்பி உள்ளனர். மற்றொன்று புதிய பந்தில் சிராஜ் விக்கெட்கள் கைப்பற்றும் திறனை வளர்த்துக்கொண்டுள்ளார்.

ஷுப்மன் கில், விராட் கோலியை போன்று ரோஹித் சர்மாவும் மட்டையுடன் உள்ள தொடர்பை புதுப்பித்துக்கொண்டார். இம்முறை அவரிடம் இருந்து பெரிய அளவிலான சதம் ஒன்று வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட்கோலி மீண்டும் ரன் வேட்டை நிகழ்த்த தொடங்கி உள்ளது நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.

சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேலும் இந்தத் தொடரில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ஷாபாஷ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை விட வாஷிங்டன் சுந்தரை களமிறக்குவதில் அணி நிர்வாகம் ஆர்வம் காட்டக்கூடும். ஏனெனில் நியூஸிலாந்து அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் பேர் உள்ளதால் வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சு கைகொடுக்கக்கூடும். இதேபோன்று யுவேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சில் சிராஜ், ஷமி, உம்ரன் மாலிக் ஆகியோருடன் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா பலம் சேர்க்கக்கூடும்.

நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. அந்த அணி டாம் லேதம் தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் பின் ஆலன், டேவன் கான்வே,கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். இவர்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் தரக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் விலகல்

நடுவரிசையில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் முறையே 28, 28, 38 ரன்கள் சேர்த்திருந்தார். ஸ்ரேயஸ் ஐயர் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கக்கூடும். இதனால் ஸ்ரேயஸ் ஐயருக்கு மாற்றாக சேர்க்கப்பட்டுள்ள ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து சூர்யகுமார் யாதவ் நடுவரிசையிலும், இறுதிப் பகுதியிலும் மட்டையை சுழற்றக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்